கம்பத்தில் தோன்றிய முருகப்பெருமான்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கம்பத்தில் தோன்றிய முருகப்பெருமான் பற்றிய பதிவுகள் :

அருணகிரிநாதர் என்றாலே, அவர் பாடிய திருப்புகழ்தான் நினைக்கு வரும். இளம்வயதில் பெண்கள் மீது மோகம் கொண்டு அலைந்த அருணகிரிநாதர், அவரது சகோதரியால் மனம் திருந்தினார். இவ்வளவு காலமும் பயனற்று வாழ்ந்ததை எண்ணி வருந்திய அவர், தற்கொலை முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி, கீழே குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரைத் தாங்கிப் பிடித்து அருளினார்.

அருணகிரியாரின் உடல் நோயையும், மன நோயையும் குணப்படுத்திய முருகப்பெருமான், அவருக்கு தன்னை புகழ்ந்து பாடும் சக்தி அருளினார். முருகனின் அருளால் அருணகிரியார் பாடிய முதல் பாடல்தான், ‘முத்தைத் தரு பக்தி திருநகை..’ என்ற சிறப்புமிக்க பாடலாகும். தொடர்ந்து முருகனின் புகழைப்பாடிய அருணகிரியார் 16 ஆயிரம் பாடல்களைப் பாடியதாக சொல்லப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைத்திருப்பது, 1,307 திருப்புகழ் பாடல்கள் மட்டுமே. அந்த வகையில் முருகனின் புகழ்பாடும் திருப்புகழ் பிறப்பதற்கு அடித்தளமாக அமைந்தது, திருவண்ணாமலை திருக்கோவில் என்றால் அது மிகையல்ல.

அருணாகிரிநாதர் தற்கொலை செய்வதற்காக ஏறி குதித்த வல்லாள மகாராஜா கோபுரம் பகுதியில் வலது பக்கத்தில் முருகப்பெருமானுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னிதி ‘கோபுரத்து இளையனார் சன்னிதி’ என்று அழைக்கப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரிநாதரை ஆட்கொண்டதால் இந்த இடம் இப்பெயர் பெற்றது.

இதுபோலவே ‘கம்பத்து இளையனார் சன்னிதி’யும் தனித்துவம் கொண்டது. அதன் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது. திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகர் வசித்து வந்தார். அவருக்கு அருணகிரிநாதரை சுத்தமாக பிடிக்காது. அருணகிரிநாதரை ஒழித்து கட்ட வேண்டும் என்று அவர் நேரம் பார்த்து காத்திருந்தார். திருவண்ணாமலையை ஆண்டு வந்த பிரபு தேவமகாராஜாவின் அரண்மனையில் உயர் பதவி வகித்ததால், அவர் சொன்னதை எல்லாம் அரசர் கேட்டார். ஒரு தடவை அவர், அருணகிரிநாதரை போட்டிக்கு அழைத்தார்.

அதன்படி சம்பந்தாண்டானும், அருணகிரிநாதரும் தம்தம் வணங்கும் கடவுளர்களை, எல்லார் முன்னிலையிலும் தோன்றச் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களே வெற்றிபெற்றவர்கள் என்பது அந்தப் போட்டி. இந்த சவாலை அருணகிரிநாதரும் ஏற்றுக் கொண்டார். முதலில் சம்பந்தாண்டான் தான் வழிபடும் காளியை அழைத்தார். ஆனால் காளி வரவில்லை. இதையடுத்து அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டினார். ‘மயிலும்பாடி நீயாடி வரவேணும்...’ என்ற திருப்புகழ் பாடலை மனம்உருக பாடினார். அருணாகிரிநாதரின் முழுமையான அர்ப்பணிப்பு பக்தியால் அங்கிருந்த மண்டபத்து தூண் வெடித்தது. அந்த தூணில் இருந்து முருகப்பெருமான் மயிலோடு வந்து காட்சி அளித்தார். இதை கண்டு அனைவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.

அருணகிரி நாதருக்காக முருகப்பெருமான் இரண்டாவது தடவையாக மீண்டும் தோன்றி காட்சி அளித்த அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. முருகன் தூணில் இருந்து தோன்றும் காட்சியும், அந்த மண்டபத்து தூணில் வடிக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபம் கொண்ட முருகன் சன்னிதி ‘கம்பத்து இளையனார் சன்னிதி’ எ
ன்று அழைக்கப்படுகிறது. கம்பத்தில் இருந்து முருகன் தோன்றியதால் ‘கம்பத்து இளையனார்’ என்ற பெயர் பெற்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top