காயாரோகணர் கோவிலில் உள்ள இரட்டை நோக்கு நந்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காயாரோகணர் கோவிலில் உள்ள இரட்டை நோக்கு நந்தி பற்றிய பதிவுகள் :

64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்டவள் இந்த அன்னை. 

இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 

இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள். இங்கு ஆடிப்பூர விழா சிறப்பானதாகும். ஆடிப்பூர விழாவில் கண்ணாடித் தேரில் அம்மன் வீதி உலா வருவாள். 

அம்பாள் சன்னிதி, தேர் போல அமைக்கப்பட்டுள்ளது. அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். 

உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தன்னை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. 

நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருக்கிறது. இதனை இரட்டை நோக்கு நந்தி என்கிறார்கள்.

இந்த நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 4 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top