ராமர் வழிபட்ட தோ‌ஷம் போக்கும் சிவாலயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராமர் வழிபட்ட தோ‌ஷம் போக்கும் சிவாலயம் பற்றிய பதிவுகள் :

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோவில், ‘கீழை ராமேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால், இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது. 

மூலவர் ராமலிங்கசுவாமி. 106 சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த, அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பாள் நாமம் பர்வத வர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

இதிகாச காப்பியங்களில் ஒன்றான ராமாயணத்துக்கும் பாபநாசத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு.

இலங்கையில் ராவணனை சம்ஹாரம் செய்த தோ‌ஷம் அகல ராமபிரான் ராமேசுவரத்தில் சிவபூஜை செய்து, தீர்த்தத்தில் நீராடிவிட்டு மனைவி சீதை, தம்பி லட்சுமணன், அனுமன் ஆகியோருடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் மணற்பாங்கான குடமுருட்டி ஆற்றின் அருகே பாபநாசத்துக்கு வந்தனர். 

அப்போது தங்களை ஏதோ தோ‌ஷம் பின் தொடர்வதை உணர்ந்த சீதை அதை ராமனிடம் கூறினார். அதை கேட்ட ராமன், ராவணனின் தங்கை சூர்ப்பனகை, அரக்கர்கள் ஹரன், தூ‌ஷன் ஆகியோரை சம்ஹாரம் செய்த தோ‌ஷமே தங்களை பின்தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.

தோ‌ஷம் அகல சிவலிங்கபூஜை செய்வது தான் உத்தமம் என்று தீர்மானித்தனர். அங்கே வில்வமரம் இருந்தது. அதன் அருகே குடமுருட்டி ஆறும் ஓடுவதைக்கண்டனர்.

உடனே சீதை அனுமனை அழைத்து, நீ காசிக்கு சென்று விரைவாக சிவலிங்கம் ஒன்றை கொண்டு வருவாயாக என்று கூறினார். காசிக்கு சென்ற அனுமன் திரும்பி வரும் வரை சீதை குடமுருட்டி ஆற்றில் மூழ்கி ஈர மணலை எடுத்து வரிசையாக சிவலிங்கங்களை உருவாக்கினார்.

ராமன், லட்சுமணன் ஆகியோரின் உதவியுடன் சீதை தனது கரங்களாலேயே 100–க்கும் மேற்பட்ட லிங்கங்களை உருவாக்கினார்.

அனுமன் காசியில் இருந்து திரும்பும் முன்னதாகவே பக்தி பரவசத்துடன், வில்வ மரத்தடியில் சிவலிங்க பூஜையை தொடங்கிவிட்டனர்.

காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்த அனுமன் அதை வெளிப்பிரகாரத்தில் வைத்து விட்டார்.

காசியில் இருந்து திரும்பும் முன்பே சிவலிங்க பூஜையை தொடங்கி அது பூர்த்தியடையும் நிலையில் இருப்பதை பார்த்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்து ராம லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தார்.

அப்போது வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். வால் அறுந்து விழுந்த இடம் இன்று அனுமன் நல்லூர் என்று வழங்கப்படுகிறது.

அனுமனின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த ராமன், ‘என் பிரியமானவனே! இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 107 சிவலிங்கங்களை பக்தர்கள் வழிபட்டாலும், 108–வது சிவலிங்கமான அனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு, பின்னர் அம்பாளை வழிபட்டால் தான் முழுபலன் கிடைக்கும். 
தோ‌ஷம் நீங்கப்பெறும்’ என்றார். 

தோ‌ஷம் அகல காரணமான இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படும் என்று அருளினார். ராமபிரானின் தோ‌ஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும், சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோ‌ஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது.

விழாக்கள்

மகாசிவராத்திரி இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று இரவு 4 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை உற்சவம், சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியவை இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களாகும்.

தை மாதம் முதல் தேதி பொங்கல் அன்று சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மேலும் மார்கழியில் திருவாதிரையில் நடராஜப்பெருமான், சிவகாமி அம்மையாருடன் வந்து தீர்த்தம் அருளுகிறார்.

தல விருட்சம்

வில்வமரம். 

தீர்த்தம்

சூரியதீர்த்தம்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

சூரியன், சனி சாபம் நீக்கிய தலம்

அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வசிஷ்ட முனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரிய பகவானிடம் கேட்டார். அதற்கு அவர், தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார்.

சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப் பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது, அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார்.

முனிவர் அவரிடம் ‘எதற்காக சிரித்தாய்?’ என்று கேட்க, அதற்கு சனீஸ்வரன், ‘ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது’ என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த முனிவர், இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கும் சாபம் கொடுத்தார்.

சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார்.

பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின் பேரில் பாபநாசத்துக்கு வந்து வழிபட்டதும், முழு சாபமும் நீங்கியது.

ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கிழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top