பாவங்களைப் போக்கி, பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத சிவ ஆலயங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பாவங்களைப் போக்கி, பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத சிவ ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :

தம்பதி ஒற்றுமை ஓங்க :

தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற சிவத்தலம். சங்கரவனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். 

இங்கு புரசு தல மரம். மயிலாடுதுறை - யிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது.

சீர்காழியிலிருந்தும் வேளாங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.

வியாபாரம் மேன்மையுற :

மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பாதையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, செம்பொன்னார் கோயில். இங்கே மருவார்குழலி சமேத சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. வில்வ மரமும், வன்னி மரமும் தல விருட்சங்கள்.

இங்குள்ள குளம், சூர்ய தீர்த்தம். கல்வியில் தேர்ச்சி பெறவும் வியாபார மேன்மைக்கும் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள்.

கடன் தொல்லை நீக்கும் வள்ளல் :

மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது, விளநகர் ஆலயம். இங்குள்ள இறைவனை துறை காட்டும் வள்ளல் என்றும் இறைவியை வேயுறு தோழி அம்மை என்றும் அழைத்து வழிபடுகிறார்கள்.

சம்பந்தர் பாடிய இவ்வாலயத்தில் மெய்ஞானத் தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனைத் தொழுதால் கடன் தொல்லைகள் நீங்கும்.

பேச்சு தரும் பிரசாதம் :

இலங்கை தலை மன்னாரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங்கையிலுள்ள புகழ் மிக்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங்கப்படுகிறார்கள்.

இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படைத்தது. பேச்சிழந்தவர்களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் என்கிறார்கள். 

கொழும்பிலிருந்து ரயிலில் செல்லலாம். தமிழ் நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.

நோய் தீர்க்கும் நாயகன் :

கொடுங்குன்ற நாதர் - குயிலமுத நாயகி, மங்கைபாக நாதர் - தேன் மொழி, காசி விஸ்வநாதர் - விசாலாட்சி ஆகிய மூன்று சந்நதிகள் கொண்டது கொடுங்குன்றம் (பிரான்மலை) மலைக் கோயில். இங்கே காணப்படும் பைரவர், முருகன் சந்நதிகளும் விசேஷமானவை. உறங்காப்புளி மரம், தல விருட்சமாக உள்ளது.

தேவர்கள் வந்து நீராடிய தேனாழித் தீர்த்தம், நோய் நொடிகளைப் போக்க வல்லது. சம்பந்தர் பாடிய சிறப்புமிக்க சிவாலயம் இது. 

மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் கோயில் அமைந்திருக்கிறது. மேலூர், சிங்கம் புனரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் கொடுங்குன்றம் வரலாம்.

வாத நோய் வாராதிருக்க :

மதுரை நகருக்குள் செல்லூரில் இருக்கிறது, திரு ஆப்பனூர் கோயில். இறைவன் பெயர், திரு ஆப்புடையார். இறைவி, குரவங்கமழ் குழலி. சம்பந்தர் பாடிய இத்தலத்திற்கு வந்தால், வாத நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது.

ஆண் சந்ததி அருளும் ஆண்டவன் :

அறந்தாங்கியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம், திருப்புனவாயில். திருவாடானையில் இருந்து 18 கி.மீ. திருப்பெருந் துறையில் இருந்தும் வரலாம். அம்பாள் பெரியநாயகியோடு, விருத்த புரீஸ்வரர் அருட்காட்சி தருகிறார்.

சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை ஆகிய நான்கு தலவி ருட்சங்க ளைக் கொண்ட ஆலயம் இது. இந்திர தீர்த்தம் முதலான பத்து தீர்த்தங்களும் உண்டு. ஆண் சந்ததி வேண்டுவோர் இங்கே வந்து பிரார்த்திக்கிறார்கள்.

பில்லி, சூனியம், பெரும்பகை அகல :

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. 

இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக் கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன.

இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். 

இங்குள்ள ஸ்தல விருட்சமான வில்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top