சரஸ்வதி தேவி நாம் வணங்கும் முக்கியமான பெண் கடவுளில் ஒருவராகும். சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகின்றனர். அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள் மற்றும் பெருமைகளை கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் எடுத்துரைத்துள்ளனர்.
இத்தகைய சிறப்புகள் இருந்தும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு கோயில் இல்லை. தமிழ்நாடு முழுவதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் ஆகும்.
காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அது பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை. ராஜ ராஜேஸ்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மஹா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் இருக்கின்றன.
மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனதில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.
சரஸ்வதி தேவி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பரதேவதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படி தன் பாதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.
பிரம்மாவிற்கு கோயில் எழுப்பாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுபோல்தான் சரஸ்வதிக்கும்.
சகல கலைகளுக்கும், கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும், அதி தேவதையாகவும் விளங்குபவள் சரஸ்வதி தேவி. கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி, என பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுகிறாள்.
பிரமனுக்கு தனி கோயில்கள் இல்லாவிட்டாலும், பிரம்மனின் நாயகி கலைமகளுக்கு நாகை மாவட்டம், கூத்தனூரில் தனிக்கோயில் உள்ளது. சரஸ்வதி பூஜை அன்று தேவியின் திருப்பாதம் வெளிமண்டபம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் மலராலும், குங்குமத்தாலும் அர்ச்சித்து வழிபடுவர். தேர்வில் வெற்றி பெற, கலைகளில் தேர்ச்சி பெற, விரும்பிய துறையில் பயில, பணி புரிய வரம் அருள்பவள் சரஸ்வதியே. இங்கு அவளை வழிபட வேண்டிய யாவும் உடனே கிட்டும்.
சிவன் ஆலயங்கள் பெரும்பாலானவற்றில் சரஸ்வதி தேவி, தனி சன்னதியில் இறைவியாகவும் இருக்கிறாள். மற்ற தெய்வ கோயில்களிலும் மாடங்களிலும், கோபுரங்களிலும், நுழைவாயில் சிற்பங்களிலும் என எங்கும் சரஸ்வதி காணப்படுகிறாள்.