அழகே உருவானவளான அம்பிகை அரசிகளுக்கு எல்லாம் அரசி. அன்பின் திருவுரு. நளினத்தின் உறைவிடமான லலிதா. மூவுலகங்களுக்கும் தலைவியான திரிபுரா. தசமகாவித்யா தேவிகளுள் மூவுலகங்களிலும் இவளே பேரழகி என்று பொருள்படும் திரிபுரசுந்தரி எனப் போற்றப்படுகிறாள்.
அம்பிகையின் அழகைப் பற்றி விவரிக்கும் பல நாமங்கள் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உள்ளன. ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ எனும் நாமம் முதல் ‘காமாக்ஷி காமதாயினி’ நாமம் வரை அம்பிகையின் வர்ணனைதான். சாருரூபா, மஹாலாவண்ய சேவதி, கோமளாகாரா, காந்திமதி, சோபனா, திவ்யவிக்ரஹா, கோமளாங்கீ போன்ற நாமங்கள் தேவியின் தோற்றப் பொலிவை எடுத்துக் கூறுகின்றன. கோமளாகாரா எனில் பேரழகே வடிவெடுத்தவள் என்று பொருள். மனித வடிவத்தில் தியானிக்கப்படும் அம்பிகைக்கு மட்டுமே இப்பெயர் என்று கருதக்கூடாது. உயிர் வகைகளின் வடிவங்கள் அத்தனையும் அன்னை பராசக்தியின் ஸ்தூல வடிவ தோற்றங்களே!
சோபனா என்றால் சௌந்தர்யமே வடிவெடுத்தவள் என்று பொருள். மங்களங்களோடு கூடிய அழகு இது. மங்களமான அழகிற்கு மனதை உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் சக்தி உண்டு. சர்வ வர்ணோபஸோபிதா என்றால் எல்லாவிதமான நிறங்களையும் எடுத்து மிளிர்பவள் என்று பொருள். உலகில் எங்கெங்கு என்னென்ன நிறங்களைக் காண்கிறோமோ அதெல்லாம் அம்பிகையிடமிருந்து வந்ததுதான். அதை திருமூலர்,
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்தூரப்
பரிபுரை நாராயணீயாம் பல வண்ணத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
உருபலவாய் நிற்குமா மாது தானே!
-என்று தன் திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
அம்பிகை நிர்குணவடிவினளாகவும் சகுண வடிவினளாகவும் இருக்கிறாள். இந்த இரண்டு வடிவங்களுக்கும் சான்று சூரியனுடைய நிறமற்ற வெளிச்சத்திலும் நிறம் படைத்த வெளிச்சத்திலும் காணலாம். சூரிய வெளிச்சம் தன் மூல நிலையில் நிறமில்லாமலும் வானத்திலுள்ள நீர்த்திவலையில் அது ஊடுருவி வரும்போது வானவில்லில் ஏழு நிறங்களாக மாறுகிறது. இதில் காணப்படும் சிவப்பு நிறம் அம்பிகையின் அழகான நிறமாக வர்ணிக்கப்படுகிறது. நம் நெற்றியில் அணியும் குங்குமமும் அம்பிகையின் சிவப்பு நிறமே. திவ்ய விக்ரஹா என்றொரு நாமம். திவ்யம் என்றால் தெய்வீகமானது என்று பொருள். தெய்வீக விக்ரகம். இந்த திரிபுரசுந்தரியை ஸ்ரீசக்ரத்திலும் மேருவிலும் விக்ரக வடிவிலும் வழிபடலாம் .
அகில உலகங்களுக்கும் அவற்றின் இயக்கங்களுக்கும் அவள்தான் காரணம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அபிராமி பட்டர், அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே -என்கிறார். தேவியின் பாதங்கள் எவ்வளவு மகிமை வாய்ந்தது தெரியுமா? மண்ணுலக மனிதரும் விண்ணுலக தேவரும் மரணத்தையே வென்ற முனிவர்களும் அவளுடைய திருவடிகளைத் தொழும் அடியார் கூட்டத்தில் உள்ளனர். மார்கண்டேயர் கூட தேவியை வழிபட்டே மரணத்தை வென்றார் என்று திருக்கடவூர் புராணம் கூறுகிறது. இதைத்தான் ‘மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே’ என்று பட்டர் பாடினார்.
அந்த பராசக்தியான லலிதா திரிபுரசுந்தரியின் பாதாரவிந்தங்களை சரணடைவோம். அம்பிகையின் திருவடிகளில் சரணம்.