அம்பாளை சரண் அடைந்தால் ஸகல வரங்களும் பெறலாம்! ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் மற்றைய ஸ்தோத்ரங்கள் போல் மனிதர்கள் யாரும் படைக்கவில்லை.
ஈச்வரியின் வசினி தேவதைகள் மூலம் லோகத்துக்கு வந்தது! ஹயக்ரீவர் அகஸ்த்ய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமீயச்சூர் என்ற லலிதாம்பிகையின் சன்னிதியில் அவருக்கு உபதேசம் செய்தார். ஏனைய லோகங்கள், ஆதிசங்கரர், காளிதாஸர், அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட
தீக்ஷிதர், வரகவி பாரதியார், அபிராமி பட்டர் போன்றஅம்பாள் உபாஸகர்களால் உலகத்துக்குக் கொடுக்கப்பட்டவை.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம் ஒன்றே எல்லாவற்றுக்கும் மூத்த ஆதி ச்லோகமாகும். இதனைப் பாராயணம் செய்வோருக்கு சகல சௌபாக்யங்களும் குறைவின்றி நிரந்தரமாகக் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
அம்பாளை சிவந்த வண்ணமாக சிந்தூர வண்ணமாக த்யான ச்லோகத்தில் ஆரம்பிக்கிறோம். ஜகத்தைக் காக்க வந்தவளை உதிக்கும் சூரியனாக வர்ணிப்பதுதான் பொருத்தம் அல்லவா?
ராராஜேஸ்வரி, காமாக்ஷி, லலிதாம்பிகை, திரிபுரசுந்தரி இவர்களின் நிறம் செவ்வண்ணமாகச் சித்தரிக்கப்படுகிறது. மற்ற மூர்த்தங்களை, அம்பாளை, கரிய வண்ணமாக சித்தரிக்கிறார்கள்.
அபிராமி பட்டர் சிந்துர வண்ணத்தினாள் என்றே விளிக்கிறார். அதேபோல் சிந்தூராருண விக்ரஹாம் என த்யான சுலோகம் தொடங்குகிறது.
உதய சூரியனின் சிவப்பு! அருண என்றால்
சூரியன். சிந்தூராருண விக்ரஹாம் என்றால் உதய சூரியனின் அழகுச் சிவப்பு மேனி கொண்டவள் எனப்பொருள்.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமாவளி ஆரம்பிக்கும்போதே ஸ்ரீலலிதா என்று தொடங்கியிருக்கலாம் அல்லவா?
ஏன் ஸ்ரீ மாதா என ஆரம்பிக்கிறது? காரணம் உள்ளது.
அம்பளை யாவரும் பஞ்சக்ருத்ய பராயணா என்றே சொல்கிறோம். ஏன்? படைத்தல், காக்கல், அழித்தல் என்ற முத்தொழிகளைத் தவிர மற்றும் இரண்டு தொழில்களும் உண்டு. திரோபாவம் என்கிற மறைத்தல்,
அடுத்து ஒன்றும் உள்ளது அதுவே அனுக்ரஹம். ஆக ஐந்து தொழில்கள்.
நாம் அழித்தல் என்று சொன்னாலும் ,எந்தப் பொருளையும் அழிக்கமுடியாது. வேறு வடிவமாக மாறியே தீரும் இந்த உடல். நீக்கம் என்று சொல்லலாம்.
ஆக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்(நீக்கம்), திரோபாவம் என்ற மறைத்தல்(மாயை), அனுக்ரஹம் என்ற அம்பாளின்அருள்.
ஸஹஸ்ர நாமத்தில் ஸ்ரீமாதா என ஆரம்பமே அம்பாளின் முத்தொழிலான முதல் தொழிலிலிருந்தே தொடங்குகிறது.
சாதாரண ஜீவங்களாகிய நமக்கே தாயார் என்றால் எவ்வளவு உசத்தி? ஏனெனில் அவள்தான் நமக்கு உடலையும் கொடுத்து, உயிரையும் கொடுக்கிறாள்.
அப்படியானால் உலகத்துக்கே தாயான மாதாவான அம்பாளை ஸ்ரீமாதா என ஆரம்பிக்கிறது எவ்வளவு
பொருத்தம்?
கஷ்டங்கள் வரும்போது அனைத்து ஜீவராசிகளும் அம்மா என்றே அலறுகின்றன. நாம் விதிவிலக்கா? அப்படியிருக்க உலகத்தையே தன் குடை நிழலில்
ரக்ஷிப்பவளை அடைமொழியுடன் ஸ்ரீமாதா
என விளிப்பது எத்தனை பொருத்தம்!
முதலில் ஸ்ருஷ்டி கர்த்தாவாக சித்தரித்து அழைத்துப்பின் ஸ்ரீமஹாரஜ்ஞி என்று ஆளுபவளாக,காப்பவளாக வர்ணிக்கப்படுகிறாள்
ஸ்ரீமத் சிம் ஹாஸனச்வரீ என்ற மூன்றாவது நாமா திரும்ப ஸிம்மாசனத்தில் ஆட்சி புரிபவளாகத் தோன்றினாலும், அதற்கு ஹிம்ஸாசனச்வரீ என்ற பொருளே கொள்ளவேண்டும். ஹிம்ஸாசனேச்வரீ என்றால் அழிக்கக்கூடியவள் என பொருள் கொள்ளவேண்டும்.
ஜய ஜய ஜகதம்பசிவே.