கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் பத்துகாணி மலையில் அமைந்துள்ளது காளிமலை கோயில். மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காளிமலை. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி அன்று தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று சித்ரா பெளர்ணமி அன்று காளிமலையில் பொங்காலை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன், காளிமலை காளி அம்மன் ஆகிய சக்தி தலங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தின் நான்கு பகுதிகளிலும் அமைந்து இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கொண்டைக்கட்டிமலை, கூனிச்சி மலை, வரம்பொதி மலை ஆகிய மூன்று மலைகளும் ஒன்றாக அமைந்திருக்கின்ற காளிதேவி கோயிலில் தர்மசாஸ்தா, நாகயக்ஷி சந்நிதிகள் அமைந்துள்ளன. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
காளிமலை கோயில் அமைந்திருக்கும் பகுதி அகஸ்திய முனிவருக்கு மும்மூர்த்திகள் காட்சி தந்த தலம். திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்டவர்மா மஹாராஜாவை எதிரிகள் துரத்திக்கொண்டு வந்தபோது இந்த மலையில் தஞ்சம் அடைந்துள்ளார். மலையில் குடிகொண்டிருந்த காளி அம்மன் மன்னரை காப்பாற்றியிருக்கிறார். இதையடுத்து காளி கோயிலைப் புனரமைத்து, கோயிலுக்காக 600 ஏக்கர் நிலத்தை வரியில்லாத சொத்தாக செம்புப் பட்டயம் வழங்கினார். இந்த மலையில் 10 காணி குடும்பங்களைக் குடியமர்த்திக் கோயிலைப் பராமரிக்க உத்தரவிட்டதாக வரலாறு கூறுகின்றது.
காளிமலைகாளிமலை
இந்த மலையில் வற்றாத காளி தீர்த்தம் உள்ளது. அம்மனின் அருள்வாக்குப்படி சித்திரை மாதம் பெளர்ணமி தினத்தில் சுமார் ஒரு லட்சம் பெண்கள் இந்தக் கோயிலுக்கு வருகைதந்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள்.
இந்த ஆண்டில் இன்று காலையில் பொங்காலையும், இரவு 12 மணிக்கு காளியூட்டு, வலியபடுக்கை பூஜை போன்றவை நடைபெற உள்ளது.