நம் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. இவையனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தனி சிறப்பு உண்டு. மும்மூர்த்திகளும் அரச மரத்தில் வாசம் செய்வதாக வேத நூல்கள் கூறுகின்றன.
பிள்ளை பெற தயாராக இருப்பவர்களும் மகப்பேறு கிடைக்காதவர்களும் அரசமரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
கிழமைகளில் அரசமர வழிபாடு :
ஞாயிறு :
அரசமரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.
திங்கள் :
சிவபெருமானை மலர்களால் பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
செவ்வாய் :
அன்னை உமா தேவியை பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு கிடைக்கும்.
புதன் :
தேவகணங்களை நமஸ்கரித்து அரசமரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும்.
வியாழன் :
தட்சிணாமூர்த்தியை வணங்கி அரசமரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும், கீர்த்தியும் பெற முடியும்.
வெள்ளி :
லட்சுமியை நமஸ்கரம் செய்து அரசமரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.
சனி :
மஹாவிஷ்ணுவைப் பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரசமரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.
அரசமரத்தை எப்படி வணங்குவது :
அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.
கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.
பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. அதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.
குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.
சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை.
அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய, இரவு வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.