ஆனி மாத சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆனி மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

ஆனி மாதத்தில் சூரியன் வடதிசை நோக்கிய பயணமான உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் மாலைப் பொழுது என்கிறது சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும். நம் நாட்டில் நீண்ட பொழுது கொண்ட மாதமாகவும் ஆனி மாதம் அமைகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை கூட பகல் பொழுது நீண்டிருக்கும்.

ஆனியில் 32 நாட்கள் :

தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. பிற மாதங்களில் இல்லாத வகையில் இந்த ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.
ஜோதிடத்தின் படி மிதுன ராசி சற்று பெரிய ராசி என்பதால், இதைக் கடக்க சூரியனுக்கு சற்று கூடுதல் காலம் தேவைப்படுகிறது என்பதால் ஒரு நாள் கூடுகிறது. இதன் காரணமாக இந்த மாதத்தில் பகல் பொழுதின் அளவும் அதிகரிக்கிறது.

ஜேஷ்டாபிஷேகம் விழா:

ஆனி மாதத்தில் வரக்கூடிய கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் விழா ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்ட நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.. இந்த நட்சத்திரத்திற்கான அதி தேவதை இந்திரன். தேவர்களின் தலைவன் இந்திரன், தலைமை பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுபை நிர்வகிக்கும் திறனை புதுப்பித்துக் கொள்ள இறைவனை வழிபட்டு, நன்றி செலுத்தும் விதமாக, ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று விசேஷ அபிஷேக, ஆராதனை செய்யப்படுகிறது.

ஆனி மூலம் நட்சத்திரம் அரசாளும்:

ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரமும், பௌர்ணமியும் பெரும்பாலும் சேர்ந்து வரும். பௌர்ணமி அன்று பிறக்கும் குழந்தை பிரகாசமாகவும், அரசாளும் யோகத்தையும், ஆளுமைத் திறன் பெற்றிருப்பார். அதனால் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது.

இம்மாதத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில் தான் நடத்துள்ளது.
 
ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதேபோன்று வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

சில கோயில்களில் ஆனி பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். அந்த வகையில் திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்த வெளி கொண்ட கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும்.
 
இதேபோன்று திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமி அன்று ஸ்ரீ தாயுமானவ சுவாமிக்கு வாழைப் பழத்தார்கள் சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.
 
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறும். ஆனி பௌர்ணமியன்று சுவாமியும் அம்பாளும் வீதிவுலா வரும் போது காரைக்கால் அம்மையார் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம்.
 
தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி, தெப்பத்திருவிழா நடைபெறும். அந்த வகையில் மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top