பஞ்சாங்கம் முழு விளக்கம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்சாங்கம் பற்றிய பதிவுகள் :
 
பஞ்சாங்கம் என்பது வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். 

அவை :

1. வாரம் 
2. நட்சத்திரம்  
3. திதி  
4. யோகம் 
5. கரணம்

வாரம் : 

ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7-யை குறிக்கும்.

நட்சத்திரம் : 

அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.

திதி : 

ஒரு வானியல் கணக்கீடாகும். வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.

யோகம் :  

வானில், குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

கரணம் : 

திதியில் பாதியாகும்.

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 

1. சௌரமான முறை 
2. சந்திரமான முறை.

1. சௌரமான முறை :

இம்முறை சூரியனின் இயக்கத்தை அடைப்படையாக கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவை : 

1. சௌர வருஷ முறை 
2. சாயன வருஷ முறை

2. சந்திரமான முறை :

சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.

பஞ்சாங்க வகைகள் :

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 

1. திருக்கணித பஞ்சாங்கம் 
2. வாக்கிய பஞ்சாங்கம். 

வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

1. திருக்கணித பஞ்சாங்கம் :

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

2. வாக்கிய பஞ்சாங்கம் :

வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top