ஆடிப் பெருக்கு தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இது ஆடி மாதத்தின் 18 வது நாளில், தண்ணீரின் உயிர்வாழும் பண்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஆடிப் பேருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், ஆடிப்பெருக்கு என்பது இயற்கை அன்னையை போற்றும் வகையில் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் சடங்கு. இந்த நாளில், பக்தர்கள் பார்வதி தேவிக்கு அரிசி நிறைந்த உணவுகளை வழங்குகிறார்கள். இந்த நாளில், மக்கள் தண்ணீர் தொட்டிகள், நீர்த்தேக்கங்கள், நதிகள் மற்றும் கிணறு என ஒவ்வொரு வடிவத்திலும் தண்ணீரை வணங்குகிறார்கள்.
இந்த பண்டிகையை கொண்டாடுவது மக்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும். நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடிப்பெருக்கு பூஜை விதி, சடங்குகள், மந்திரம் மற்றும் ஆடிப் பெருக்கு எப்படி கொண்டாடுவது என்பது பற்றி காணலாம்.
ஆடி பெருக்கு
ஆடிப்பெருக்கு பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஆடிப்பதினெட்டும் ஒன்று. பொதுவாகத் தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
ஆடி பெருக்கு கொண்டாடுவதற்கான காரணம்
ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்கும். இந்த நேரம் தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும் மாதமாகவும் பயிரட தொடங்கும் மாதமாகவும் இருப்பதால், இந்த மாதம் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் இக்கொண்டாட்டம் விஷேசமாக இருக்கும். விவசாயிகள் காவிரி நீரை வணங்கி தங்கள் விவசாயப் பணிகளைத் தொடங்குவர். ஆதனால்தான், ஆடிப் பட்டம் தேடி விதை என முன்னோர்கள் சொல்லுவார்கள்.
ஆடியில் வழிபாடு
பொதுவாக ஆடி மாதம் தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அம்மனுக்கான மாதமாகவும், அம்மன் வழிபாடுகள் அதிகமாகவும் இம்மாதத்தில் நடைபெறும். ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டை சுத்தம் செய்து, குளித்து முடித்துவிட்டு, அம்மன் கோயிலுக்கு சென்று மக்கள் வழிபடுவார்கள். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான அபிஷேகம், கூல் ஊற்றுவது என விஷேசமாக கொண்டாடப்படும். இதனால், மக்கள் வாழ்வில் ஒளியையும், வளம், நம்பிக்கையை பெருக்குவார் என்பது ஐதீகம்.
சிறப்பு குளியல்
ஆடி 18ஆம் தேதி மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி கடவுளை வணங்குவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காவிரி ஆற்றை தெய்வமாக வணக்கி அதை வரவேற்று அதில் நீராடி வழிபடுவர். இதனால் பயிர்களுக்குத் தேவையான நீர் வளம் கிடைக்கும் என நம்புகின்றனர். திருமணமான புதுத் தம்பதிகள் காவேரி நதியில் குளித்து எழுந்தால், அவர்களுடைய வாழ்வில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.
தாலி கயிறு மாற்றும் சடங்கு
புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் காவிரி நதிக்கரையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து புதிய தாலியை மாற்றிக்கொள்வார்கள். அதுபோல கோயில்களிலும் பெண்கள் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிற்றை அணிவார்கள். இது தாலி கயிறு மாற்றும் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்கள். அதே போல் ஆண்கள் வலது கையில் மஞ்சள் கயிறை கட்டிகொள்வார்கள்.
என்ன படையல்?
ஆடிப்பெருக்கு நாளில் அம்மன் மற்றும் பார்வதி தேவியான பெண் கடவுள்களைதான் பெண்கள் அதிகமாக வழிபடுகின்றனர். இனிப்புப் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் என பலவிதமான சாதங்களை நதிக்கரைகளில் வைத்து கடவுளுக்கு படைப்பார்கள். குழந்தை இல்லாத தம்பதிகள் இதுபோன்ற படையலிட்டு வழிபாடு செய்தால், குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
இறுதிகுறிப்பு
நதிகளின் உயிர்காக்கும் பண்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆடிப்பெருக்கு அன்று மக்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் வழிபடுவார்கள். செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் திருவிழா ஆடிப் பெருக்கு. இந்த ஆடிப்பெருக்கு வழிபாடு அனைத்து மக்களுக்கும் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியை வழங்கும்.