கருட பஞ்சமி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கருட பஞ்சமி விரதம் பற்றிய பதிவுகள் :

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். மேலும் கருடன் பிறந்த தினத்தை கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப் படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். 

கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.

கருட பஞ்சமியன்று பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கருடனுக்கு கிட்டியது. எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். 

மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். 

அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். 

இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். 

பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். 

அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். 

ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top