மந்த்ர புஷ்பம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மந்த்ர புஷ்பம் பற்றிய பதிவுகள் :

மந்த்ர புஷ்பம் என்பது ஒரு வேத பாடலாகும். இது பூஜைகளின் முடிவில் இந்து தெய்வங்களுக்கு மலர்களை சமர்ப்பிக்கும் நேரத்தில் பாடப்படுகிறது.

மந்திரம் வேத மந்திரங்களின் மலராக கருதப்படுகிறது.

இந்த மந்திரம் யஜுர் வேதத்தின் தைத்திரிய ஆரண்யகத்திலிருந்து எடுக்கப்பட்டது. 

நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகங்கள் மற்றும் நேரம் பற்றிய இரகசிய அறிவால் வழங்கப்படும். வரம்பற்ற நன்மைகளைப் பற்றி இது பேசுகிறது. 

இது பொதுவாக எந்த பூஜை (வழிபாடு) அல்லது யாகம் செய்த பிறகு அனைத்து ப்ரோகிதர்களாலும் பாடப்படுகிறது. நீர் (இங்கு நீர் ஈதர்) இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்கிறது.

மந்திர சக்தியை உடைய புஷ்பம் என்று சொல்வதை விட, மந்திர உச்சாடனத்தின் மூலம் சக்தி பெற்ற பூக்களைக் கொண்டு வணங்குவது என்று புரிந்துகொள்ளலாம். 

ஆலயத்தில் அபிஷேகம், அலங்காரம், ஷோடஸ உபச்சார தீபாராதனை, சதுர்வேத பாராயணம் என்று அத்தனை உபச்சாரங்களையும் இறைவனுக்கு செய்து முடித்த கையோடு, ‘யோபாம் புஷ்பம் வேத..’ என்று ஆலயத்தில் அர்ச்சகரின் குரல் கணீரென்று ஒலிக்கும்போது மெய் சிலிர்க்கும். 

ஒவ்வொரு கால பூஜையின்போதும் மகாதீபாராதனைக்கு முன்னதாக ஆலயங்களில் ஓதப்படும் இந்த மந்த்ரபுஷ்பம் என்கிற வேத மந்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. பொருள் புரியாதவர்கள் கூட அந்த மந்திரத்தின் ஸ்வரத்திலும், உச்சரிப்பிலும் மெய்மறந்து மனம் உருகி நிற்பர்.

நம் இல்லங்களில் நடைபெறும் பூஜையின்போதும் ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய ஸ்வரத்தில் சாஸ்திரிகள் இந்த மந்திரபுஷ்பத்தை உச்சாடனம் செய்யும்போது நாமும் அவரோடு இணைந்து சொல்வது போன்ற ஒரு உள்ளுணர்வு நமக்குள் உண்டாவதை உணர முடியும். 

எல்லாவிதமான பூஜைகளின் போதும், அதன் உச்சக்கட்டத்தில் முத்தாய்ப்பாக இந்த மந்திரபுஷ்பத்தைச் சொல்கிறார்களே... அப்படி என்னதான் சிறப்பு இதற்கு என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த நீர்தான் உலகின் அடிப்படை ஆதாரம் என்பதையே இந்த மந்திரம் வலியுறுத்துகிறது. நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. 

இறைவனின் படைப்பில் உருவான இந்த இயற்கைச் சக்திகளைக் கொண்டு வழிபடுவதுதான் இந்த மந்த்ர புஷ்பத்தின் தனிச்சிறப்பு. ஆப: என்றால் தண்ணீர் என்று பொருள். யோ + ஆப: + புஷ்பம் = யோபாம் புஷ்பம் என்று அந்த மந்திரம் துவங்குகிறது.

திருப்பாற்கடலைக் கடையும்போது அந்த ஜலத்தில் இருந்து புஷ்பமாக எழுந்தவன் சந்திரன். அந்த சந்திரனைக் கொண்டு உம்மை வழிபடுகிறேன். இறைவன் இந்த உலகத்தை படைக்கும் காலத்தில் இந்த ஜலத்தில் இருந்து உருவானதே அக்னி. ஆயதனம் என்றால் அடிப்படை ஆதாரம் என்று பொருள். அக்னிக்கு ஆயதனம் ஆப: என்று அழைக்கப்படுகின்ற நீர். அந்த நீருக்கு ஆயதனம் அதாவது அடிப்படை அக்னி. 

இவ்வாறு நீரும், நெருப்பும் ஒன்றுக்கொன்று ஆதார சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிவியலை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது இந்த வேத மந்திரம். (ஜலத்தில் ) நீரிலிருந்தே்இருந்தே (வாயு ) காற்று தோன்றுகிறது.  

இந்த (வாயு )காற்றுஎடுத்துச் செல்லும் நீர்த்திவலைகளே மேகங்கள். அப்படியென்றால் வாயுவிற்கு அடிப்படையாக (ஜலமும்) நீரும்; அந்த நீரிரக்கு ஆதாரமாக (வாயுவும்) காற்றும்ஒன்றுக்கொன்று தொடர்பு பெறுகிறது. சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி உருவாவது மேகங்கள். இந்த மேகம் பொழிவிப்பதே மழை. ஆக இந்த மழை நீருக்கு அடிப்படை சூரியன், சூரியனுக்கு ஆதாரம் நீர் என்று சந்திரன், நக்ஷத்திரங்கள், ஸம்வத்ஸரம் என்று அழைக்கப்படக்கூடிய காலத்தின் அளவுகள் அத்தனையும் நீர் என்ற ஆதார சக்தியுடனும், நீர் என்பது இத்தனை இயற்கை சிருஷ்டிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது.  

இறைவா, நீ சிருஷ்டித்த இந்த இயற்கையின் பிணைப்புகள் சரியான முறையில் இயங்கி இந்த மண்ணில் நீர்வளம் பெருக வேண்டும், அதனால் இப்பூவுலகில் (ஜீவராசிகள்) உயிரினங்களும் அனைத்தும் எவ்விதக் குறையுமின்றி ராஜாதி ராஜன் ஆகிய குபேரனின் அனுக்ரஹத்தோடு அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழவேண்டும் என்பதே இந்த மந்த்ர புஷ்பம் என்ற வேதமந்திரத் தொகுப்பின் பொருள். 

ஒவ்வொரு கால பூஜையின்போது ஆலயங்களிலும், நமது இல்லத்தில் நடைபெறுகின்ற யாகாதி கிரியைகள், பூஜைகளின்போதும் இந்த மந்திரத்தொகுப்பினை முழுமையாகச் சொல்லி ஆத்மார்த்தமாக இறைவனை வழிபடும்போது வான்முகில் பொழிந்து மண்வளம் சுரந்து, விளைபொருட்களும் செல்வங்களும் பெருகி, மக்கள் வளமுடன் வாழ்ந்து மன்னர்தம்கோன் ஓங்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top