மஹா லட்சுமி சிவ பூசை செய்த தலங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா லட்சுமி சிவ பூசை செய்த தலங்கள் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு ஊழியிலும் அம்மை தாயுமான சிவனால் மாதேஸ்வரனால் படைக்கப்படும் பெண் தெய்வம் லட்சுமி.

திரு ஈன்ற தென் பரம்பைக் குடி மேய திரு ஆலம் பொழிலானை (அப்பர்) என்று லட்சுமியைப் படைத்த ஈசனை தேவாரம் போற்றுகிறது. திருவாரூர் தியாக ராஜர் கோயில், நாகப்பட்டினம் அருகே திருச் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் கோயில், வைதீஸ்வரன் கோயில் அருகே திருநின்றியூர் மஹா லட்சுமீஸ்வரர் கோயில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அருகே உள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில், திருவாரூர் அருகே திருத்தெங்கூர் வெள்ளிமலை நாதர் கோயில், திருப் பத்தூர் (சிரீ தளி) சிரீ தளி நாதர் கோயில், சிரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோயில் மற்றும் பலப் பல தலங்கள் திருமகள் சிவ பூசை செய்து தன்னைப் படைத்த பரமேஸ்வரனை வழிபட்டு வரமும் நலமும் பெற்றவை.

திருவாரூர் தியாக ராஜர் கோயில்

சமுத்திர ராஜன் மகளாக அவதரித்த லட்சுமி குளம் உண்டாக்கி ஆரூரர் ஆகிய புற்றிடங்கொண்ட லிங்கப் பரம்பொருளையும் தந்தை தாய் சேய் ஆகிய மூவுருவத் தியாக ராஜரையும் பூஜித்துத் திருமாலை மணாளனாகப் பெற்றாள்.

செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார். கமலை (தாமரையாள்) என்ற லட்சுமி பூஜித்ததால் திருவாரூர் தியாக ராஜர் கோயிலுக்குக் கமலாலயம்‌ (பூங்கோயில்) என்று பெயர்.

திருச்சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் கோயில். ஈசன் திருவருளால் திருமணம் ஆன பின்பு மணக் கோலத்தில் மஹா விஷ்ணுவுடன் வந்து லட்சுமி சிவ பூசை செய்த கோயில்.

சிரீ சைலம் மல்லிகார்ஜுனர் கோயில்

ஆந்திரப் பிரதேசத்தில் விஜயவாடா மற்றும் ஓங்கோலுக்கு அருகே உள்ளது. பன்னிரண்டு ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று. எண்ணற்ற பல பிறவிகளில் பிறந்து உழல வேண்டும் என்று துர்வாச முனிவரால் விஷ்ணு சாபம் அடைந்த போது திருமகள் பூமிக்கு வந்து மல்லிகையும் மருத மரமும் நிறைந்த மலைப் பிரதேசத்தில் மருத மரத்தடியில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து மல்லிகைப் பூவால் பூஜித்தாள். 

இதனால் மல்லிகார்ஜுனம் என்று பெயர். பரமேசுவரனுக்கு மல்லிகார்ஜுனர் என்று திருநாமம். லட்சுமிக்கு அருளிய மல்லிகார்ஜுனர் எண்ணற்ற பல பிறவி என்பதைப் பத்து பிறவியாகக் குறைத்து அருளினார். அந்தப் பத்தும் தொடர்ச்சியாக இல்லாமல் ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் விஷ்ணுவிற்கு அறக்கருணை மறக்கருணை காட்டி மீண்டும் வைகுண்ட வாழ்வை அருளிச் செய்தார்.

பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் என்று ஈசன் கருணையை அப்பர் போற்றுகிறார். சிரீ தேவி பூஜித்ததால் சிரீ சைலம் என்று பெயர். யான் எனது என்ற ஆணவ மலத்தால் பற்றப்பட்ட பார்வதி சிறந்த மெய்யடியாரான பிருங்கி முனிவருக்கு எலும்புக் கூடாகப் போகுமாறு சாபம் கொடுத்த பாவத்தினால் மல்லிகா என்ற வேடுவப் பெண்ணாகிப் பல காலம் சிவ பூஜை செய்து வாழ்ந்த தலம். பரமேசுவரன் அர்ஜுனன் என்ற வேடனாக வந்து திருமணம் செய்து கொண்டு அருளி மீண்டும் தேவியாக்கி யருளினார்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழலிலும் பரம்பொருளைத் தவிர உயிரினங்களான ஆண் பெண் தெய்வங்களைத் தொழாத சிறந்த மெய்யடியாராய் வண்டாக மாறி சிவ பரம் பொருளை வலம் வந்த பிருங்கி முனிவர் காரணமாகப் பிறவி உண்டாகி சிவ பூஜை செய்து மீண்டும் தேவி ஆனதால் பார்வதிக்கு பிரமராம்பிகை (வண்டு அம்மன்) என்று பெயர். பிரமரம் என்றால் வண்டு என்று பொருள்.             
சிவன் அருளால் வினை சேரகிலாமை சிவனருள் கூடின் அச் சிவ லோகம் ஆமே (திருமந்திரம்) தண்டி குண்டோதரன் பிங்கு இருடி சார்ந்த புகழ் சங்கு கன்னன் (அப்பர்) பிருங்கி இருடிக்கு மா வரம் ஈந்தும் (நக்கீரர்) என சீரிய சிவனடியார்களுக்கு யாருடைய சாபத்தாலும் எந்தக் குறைவும் உண்டாகாது. ஆதலால் காரைக்கால் அம்மையார் வேண்டிப் பெற்ற எலும்பு உருவுடன் பிருங்கி முனிவர் சிவ பூஜை செய்து சிவனருளால் மீண்டும் எழில் பெற்றுப் பிறவி நீங்கி முக்தி அடைந்து பார்வதி செல்ல முடியாத சிவலோகம் சேர்ந்து சிவ கணமாகி ஈசனுடன் நிலைபெற்ற தலம் சென்னை அருகே உள்ள பிருங்கி மலை. இது பரங்கிமலை என்று சிதைத்து வழங்கப்படுகிறது.

திருநின்றியூர் மஹா லட்சுமீசுவரர் கோயில்

வைதீசுவரன் கோயில் அருகே உள்ளது. பெரிய லிங்கப் பரம்பொருளைப் பூசித்த லட்சுமிக்கு சங்க நிதி பதும நிதி ஆகிய அட்சய செல்வங்களை அருளிச் செல்வத்தின் தெய்வம் ஆக்கி அருளிய ஈசுவரனுக்கு மஹா லட்சுமீசுவரர் என்று அருள் நாமம். இந்த நாள் அட்சய திரிதியை நாளாக கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு சென்னை அருகே திருநின்றவூர் மற்றும் நாடு முழுவதும் பலப் பல கோயில்கள் மகா லட்சுமி சிவ பூஜை செய்து துன்பம் நீங்கி வரம் பெற்று இன்பம் அடைந்த கோயில்கள்.

நன்றி - சிவப்பிரியா.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top