ஆவணி அவிட்டம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆவணி அவிட்டம் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. 

உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு விஸ்வகர்மா மற்றும் பிராமண சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்ற செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது. 

ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள்.

வளர்பிறை, தேய்பிறை திதிகளின் அடிப்படையில் ஒரு சில தமிழ் மாதத்தில் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி நிகழ்வும், எனவே, ஒரு குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வர வேண்டிய விசேஷம் அல்லது பண்டிகை முதல் மாதத்திலேயோ அல்லது அதற்கு அடுத்த மாதத்திலோ வரும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் வரக்கூடிய இந்த பண்டிகை ஆடி மாதத்திலேயே ஆகஸ்ட் 11 ஆம் தேதி பௌர்ணமி அன்று கொண்டாடப்பட்டது.

ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம்

ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண என்று நான்கு வேதங்கள் உள்ளன. அசுரர்களால் வேதங்கள் திருடப்பட்டு, யாராலும் மீட்க முடியவில்லை. எனவே மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள் தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது. இந்த நாளன்று மஹா விஷ்ணு மீட்ட வேதத்தை படிப்பதன் மூலம் புதிய தொடக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆவணி அவிட்ட நாள் அன்று தான் வேதங்களை படிக்கத் துவங்குவார்கள். இது உபகர்மா என்று கூறப்படுகிறது. இது விஸ்வகர்மா மற்றும் பிராமண சமூகத்தில் மிகவும் முக்கியமான ஒரு நாள் மற்றும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் நீர் நிலைகளின் அருகில் தான் மந்திரங்கள் ஜபித்து, பூணூல் மாற்றிக் கொள்வார்கள்.

விஸ்வகர்மா மற்றும் பிராமண சமூகத்தில், ஆண் குழந்தைகளுக்கு பூணூல் போடும் உபநயன விழா மிகப்பெரிய விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அவரவர் குடும்பத்தில் இருக்கும் வழக்கத்துக்கு ஏற்ப, 7 வயது தொடங்கி ஒற்றைப்படை வயதில் இரண்டு நாள் விசேஷமாக, உபநயனம் செய்யப்படும். பூணூல் அணிந்து கொண்ட பின்னர், தினமும் மந்திரங்கள் சொல்லி ‘சந்தியா வந்தனம்’ பாராயணம் செய்யும் வழக்கமும் உள்ளது. அதன் பிறகு, வீட்டில் மற்றவர்களோடு இணைந்து கொண்டாடும் முதல் ஆவணி அவிட்டம், ‘தலை ஆவணி அவிட்டம்’ என்று கூறப்படுகிறது.

அதே போல, திருமணமானவர்களுக்கு, பூணூல் அணியும் பழக்கம் உள்ள அனைத்து சமூகத்திலும், திருமணம் ஆன பிறகு வரும் முதல் ஆவணி அவிட்டம், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பூணூல் அணிந்தவர்கள் தான் பித்ரு காரியம் செய்ய முடியும் என்பதால், பல குடும்பங்களில் இளம் வயதிலேயே ஆண் பிள்ளைகளுக்கு பூணூல் அணிவிக்கிறார்கள்.

பஞ்ச பூதங்களையும், சப்த ரிஷிகளையும், ஹயக்ரீவரையும் வழிபட பின்னரும், தந்தையை இழந்தவர்கள், தர்ப்பணம் செய்த பிறகும் புதிய பூணூலை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆவணி அவிட்ட நியமங்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்களை கர்ம வினை சூழாது என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top