மனிதர்கள் அனைவரும் தங்களின் தாயின் கருவறையில் பத்து மாதங்கள் வளர்ந்து குழந்தையாக பிறக்கிறார்கள். அப்படி அக்குழந்தை கருவாக உருவான காலம் தொட்டு அதை குழந்தையாக பிறப்பிக்கும் வரை ஒவ்வொரு தாயும், தனது உயிரை காப்பது போல் தனது கருவை காக்கிறாள்.
7 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த திருக்கருகாவூர் திருக்கோவிலின் இறைவன் முல்லைவன நாதர் எனும் பெயருடன் விளங்குகிறார். இறைவி “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” எனும் பெயருடன் விளங்குகிறாள். திருஞானசம்பந்தர், அப்பர், திருநாவுக்கரசர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தளம் இது.
முற்காலத்தில் நித்துருவர் என்பவர் வேதிகை என்ற மனைவியுடன் இவ்வூரில் வசித்து வந்தார். தங்களுக்கு குழந்தைபேறில்லை என வருந்திய இத்தம்பதியினர். இக்கோவிலின் இறைவனான முல்லைவனநாதரை வழிபட்டு வந்த போது வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் வேதிகையின் இல்லத்திற்கு யாசகம் கேட்டு வந்த முனிவர் ஒருவர், வீட்டினுள் பிரசவ மயக்கத்தில் இருந்த வேதிகை தான் யாசகம் கேட்டும் வெளியே வராமல் தன்னை அவமதித்ததாக கருதி, அவளுக்கு சாபமிட்டு சென்றார். அதன் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது.
இதனால் மனவேதனையடைந்த வேதிகை இக்கோவிலின் தேவியான பார்வதியிடம் முறையிட, அந்த இறைவி வேதிகையின் கருவை ஒரு குடத்தில் பத்து மாதம் காலம் காப்பாற்றி “நைதுருவன்” என்ற ஆண் குழந்தையாக வேதிகையிடம் தந்தாள். தன் பக்தையின் கர்ப்பத்தை ரட்சித்ததால் அன்று முதல் இந்த ஆலயத்தின் இறைவி “கர்பரட்சம்பிகை” என அழைக்கப்படுகிறாள். இறைவனே குழந்தை கருவை அழியாமல் காத்ததால் இத்தலம் “திருக்கருகாவூர்” என பெயர் பெற்றது.
தல சிறப்பு
இக்கோவிலின் இறைவனான முல்லைவனநாதரின் லிங்க வடிவம் எறும்பு புற்றினால் ஆன சுயம்பு வடிவமாகும். கருவுற்ற பெண்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட அவர்களுக்கு கருச்சிதைவு போன்ற எந்த ஒரு விபரீதங்களும் ஏற்படுவதில்லை. எனவும் மேலும் இப்பெண்கள் அனைவருக்கும் சுக பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதாகவும் கூறப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு குறைப்பிரசவம், பிரசவ கால வேதனை, பேறு கால மரணம் போன்ற எதுவும் இந்த கர்பரக்ஷம்பிக்கையின் அருளாற்றலால் ஏற்படாமல் தடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேறி நல்ல விதமாக குழந்தையை பெற்ற பெண்கள் இக்கோவிலுக்கு வந்து துலாபாரத்தில் எடைக்கு எடை தானியங்கள், வெல்லம் போன்றவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர். இனிப்புகளை படையலாக வைத்தும் தங்களின் நன்றியை அம்மனுக்கு தெரிவிக்கின்றனர்.
கோவிலின் அமைவிடம்
இந்த திருக்கருகாவூர் கோவில் தற்போதைய தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்தும் திருவாரூரிலிருந்தும் இக்கோவிலுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன.