தமிழ்நாட்டில், பிரசித்தி பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ்நாட்டில், பிரசித்தி பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய பதிவுகள் :

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி அன்று, கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். குழந்தை கிருஷ்ணர் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருவார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், வீட்டு வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரை குழந்தையின் கால் தடங்கள் வரையப்பட்டிருக்கும். வீடுகளில் மட்டுமல்லாமல், பல்வேறு கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும். குட்டி கிருஷ்ணர் என்று குழந்தை வடிவில் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சியளிக்கும் பல ஆலயங்கள் வெளி மாநிலங்களில் உள்ளன.

அதே போல, தமிழ்நாட்டில், பிரசித்தி பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள் உள்ளன. பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கபிலஸ்தலம், இந்த 5 கிருஷ்ணர் ஆலயங்களும், மகா விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் அடங்கும். இந்த கோவில்கள் அனைத்தும் காவிரி ஆற்றங்கரையில் மற்றும் அதன் கிளைகளின் கரைகளில் அமைந்துள்ளது. மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் தான் உற்சவ மூர்த்தி, எல்லா பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும், ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார். தமிழ் நாட்டின் பஞ்ச கிருஷ்ண ஆலயங்கள் போல, வட மாநிலத்தில் பஞ்ச துவாரகா என்று ஐந்து கிருஷ்ணர் கோவில்கள் பிரசித்தி பெற்றவை.

திருக்கோவிலூர்

உலகளந்த பெருமாள் கோவில் என்று பிரசித்தி பெற்ற உலகநாதர் அல்லது திருவிக்கிரம ஆலயம் திவ்யதேசங்களில் மிகப்பெரிய பெருமாள் சிலை கொண்டிருக்கும் கோயிலாகும். திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், கிருஷ்ணர் சன்னதியில், சாளக்கிராம கல்லால் உருவான ஸ்ரீ கிருஷ்ணர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மகாலஷ்மி தாயார் பூங்கோதையாகவும், குழந்தை கிருஷ்ணருக்கு பதிலாக எட்டாவது குழந்தையாக மாற்றப்பட்ட விஷ்ணு துர்க்கைக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.

இந்த ஆலயம், தொடக்கத்தில், ஸ்ரீ கிருஷ்ணனுக்கான ஆலயமாகக் கட்டப்பட்டதாகவும், கோவிலூர் என்பது கோபாலன் என்ற கிருஷ்ண பகவானைக் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமும், மகாபலி அரசன் பற்றிய புராணங்களில் இந்த கோவில் இடம்பெறுகிறது.

திருக்கண்ணங்குடி

லோகநாத பெருமாள் ஆலயத்தின் ஸ்தல வரலாறு, புராண காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் வழிபட்ட கதைகளைக் கொண்டுள்ளது. சிக்கலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர பக்தரான வசிஷ்ட மகரிஷி தன்னுடைய வீட்டில் வெண்ணையால் செய்யப்பட்டிருந்த கிருஷ்ணரின் திருவுருவத்தை வழிபாடு வழங்கிக்கொண்டிருந்தார் அப்போது கிருஷ்ணர் குழந்தை வடிவெடுத்து வெண்ணையை சாப்பிட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்தக் குழந்தையை துரத்திச் சென்ற வசிஷ்ட மகரிஷி ஒரு மகிழ மரத்தடியில் கிருஷ்ணர் மறைந்ததைக் கண்டு அங்கு நின்றார். அந்த இடத்தில் பல முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தவத்தையும் பக்தியையும் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு வரம் அளித்தார். அந்த இடத்திலேயே அருள் பாலிக்குமாறு அனைவரும் வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோள் படி, கிருஷ்ணர் அங்கேயே தங்கினார். அந்த இடத்தின் பெயர் திருக்கண்ணன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணு லோகநாத பெருமாளாகவும், மகாலஷ்மி தாயார் லோக நாயகியாகவும் காட்சியளிக்கிறார்.

திருக்கண்ணபுரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கண்ணபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது, நீல மேகப் பெருமாள் ஆலயம். பஞ்ச கிருஷ்ண ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்துக்கு, கண்ணபுரம் என்று பெயர் சூட்டப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ‘நமோ நாராயணா’ என்று மகாவிஷ்ணுவின் அட்ஷாட்சரத்தை எங்கிருந்து கூறினாலும் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு தலத்தை எனக்கு காண்பிக்க வேண்டும் என்று கண்வ முனிவர் நாரதரிடம் வேண்டிக் கொண்டார். அவருடைய வேண்டுதலால் நெகிழ்ந்த நாரத முனிவர், செளரிராஜன் என்ற நாமத்தோடு மகாவிஷ்ணு சமுத்திரத்திற்கு அருகில், திருக்கண்ணபுரம் என்ற ஊரில் அருள்பாலிக்கிறார்; அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமாகவும், வனமாகவும், நதியாகவும், கடலாகவும், நகரமாகவும், தீர்த்த புஷ்கரணியாகவும், விமானமாகவும் அமைந்திருக்கும் ஒரு இடமாகும்.

இந்த ஏழு இடமும் சேர்ந்திருப்பது அரிதிலும் அரிதானது. க்ஷேத்திரம் இருக்கும் இடத்தில் சமுத்திரம் இருக்காது அல்லது வனம் இருக்காது. ஆனால் இந்த இடத்தில் ஏழும் உள்ளது, எனவே அங்கு சென்று மந்திரத்தை ஜபித்தால் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும் என்று நாரத மகரிஷி கண்வ முனிவரிடம் கூறினார். மகரிஷியின் கூற்றை பின்பற்றிய கண்வ முனிவருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் தந்தார்.

திருக்கண்ணமங்கை

மஹாலட்சுமி, பூமியில் சாதாரண பெண்ணாகப் பிறந்து, தவம் செய்து மஹாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்ட தலம் தான் திருக்கண்ணமங்கை. திருவாரூர் மாவத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மும்மூர்த்திகளின் தீவிர பக்தரான பிருகு முனிவரின் கதையை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதைப் பற்றி பல திரைப்படங்களும் வந்துள்ளன. மும்மூர்த்திகளை மட்டுமே வணங்குகிறார் என்று மூன்று தேவியரும் கோபித்துக்கொண்டு, சாபம் பெற்று பூமியில் பெண்ணாக பிறப்பு எடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான், பிருகு முனிவரின் மகளாக மகாலட்சுமி பிறந்த கதை. பிருகு முனிவருக்கு மகளாக பிறந்த மகாலட்சுமியை, கிருஷ்ண மங்கை என்றே பிருகு முனிவர் அழைத்து வந்தார்.

மஹாவிஷ்ணுக்காகவே பிரப்பெடுத்த பெண் என்று கூறினார். இருப்பினும் தன்னுடைய மகளை பகவான் மகாவிஷ்ணு எப்படி திருமணம் செய்து கொள்வார் என்ற கவலையும் இவருக்கு இருந்தது. திருமகள் தவமிருந்து மகாவிஷ்ணுவின் கைப்பற்றிய தலம் லக்ஷ்மி வனம் என்றும், கிருஷ்ண மங்கள ஷேத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைக் கேட்பதற்காகவே, பெரியவாச்சான் பிள்ளை என்ற அவதாரமும் எடுத்தார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் தான் கிருஷ்ணர் பிறந்தார். அதே நட்சத்திரத்தில்தான் பெருமாளும் பெரியவாச்ஸானாக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

திருக்கபிலஸ்தலம்

கும்பகோணத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, கஜேந்திர மோட்சம் பெற்ற ஸ்தலம் என்று இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராவணனை அழித்த பின்பு ராமர் அயோத்தியை சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்த காலத்தில் சுக்ரீவனும் அனுமனும் திருக்கபிகள் என்று அழைக்கப்பட்டனர். கபிகள் என்றால் வானரங்கள் என்று பொருள். கிஷ்கிந்தையை சுக்ரீவன் ஆட்சி செய்து வந்தாலும், சுக்ரீவனுக்கு மனக் கவலை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஸ்ரீராமர் தான் தன்னுடைய சகோதரனான வாலியை வதம் செய்தார் என்றாலும் அதற்கு தானும் ஒரு காரணமாக அமைந்து விட்டது ஒவ்வொரு நாளும் சுக்ரீவனுக்கு குற்றவுணர்ச்சியை அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே குற்ற உணர்வு நீங்குவதற்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

காவேரி நதியில் நீராடி கிருஷ்ணரை ஸ்தாபனம் செய்தால் குற்றவுணர்வு நீங்கிவிடும் என்று இறைவனின் அசரீரி கேட்டது. பத்து அவதாரங்களில் ஏழாவது அவதாரம் ஸ்ரீ ராமர், ஒன்பதாவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர், இதில் கிருஷ்ணர் எங்கிருந்து வந்தார் என்ற கேள்வி எழலாம். ஆனால் அவதாரங்களைப் பொறுத்தவரை ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமை பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் தான் வராக அவதாரமாகவும், கிருஷ்ணராகவும் வந்துள்ளனர். சுக்ரீவன் கிருஷ்ணரை வழிபட்டதை அடுத்து திருமழிசையாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் ஆற்றங்கரையில் கடந்த கிடந்த கண்ணன் என்று பாடியிருக்கிறார். கபி அதாவது ஒரு வானரமான சுக்ரீவன் கண்ணனை வழங்கிய காரணத்தால் இந்த இடம் கபிலஸ்தலம் என்று பெயர் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top