வரலட்சுமி விரதம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வரலட்சுமி விரதம் பற்றிய பதிவுகள் :

செல்வம், உடல் நலம், மாங்கல்ய பலம், பிள்ளை செல்வம் இவை அனைத்தையும் தந்தருளும் அருமையான பூஜைதான் வரலக்ஷ்மி விரதம்.

வடக்கே மகத தேசத்தில் வாழ்ந்தவள் சாருமதி. தன் மாமனாருக்கும் மாமியாருக்கும் பணிவிடைகள் செய்து, கணவனே கண்கண்ட தெய்வமென வாழ்ந்து வந்தாலும், தேவியை அனுதினமும் பூஜித்துவந்தாள்.

அவள் இன்னும் சௌக்கியங்களைப் பெற்று வாழ, கனவில் வந்து இந்த விரதம் குறித்தும் கடைப்பிடிப்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாள் மஹாலக்ஷ்மி. ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்ளவேண்டும். 

வரலக்ஷ்மி விரதத்துக்கு முதல்நாளே, வீட்டைப் பெருக்கி, கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கிழக்கு அல்லது மேற்குப் பார்த்தபடி, தரையில் கோலமிடவேண்டும். அந்தக் கோலத்தின் மீது, மணைப்பலகையை சுத்தப்படுத்தி வைக்கவேண்டும்.

பலகையின் மேல் கோலமிடவும். அதன் மேல், சொம்பு ஒன்றை எடுத்து மஞ்சள் பூசி வைக்கவும். அந்தச் சொம்பில், அரிசியும் துவரம்பருப்பும் கலந்து கால்பாகம் நிரப்பிவைக்கவேண்டும். அத்துடன் கருகமணி, வளையல், சீப்பு, கண்ணாடி, எலுமிச்சை, குங்குமம் நிறைந்த சிமிழ், சில்லறைக்காசுகள் போடவேண்டும்.

அந்த கலசத்துக்குள், வெற்றிலை பாக்கு வைக்கவும். இவை ஒவ்வொரு குடும்ப சம்பிரதாயத்துக்குத் தக்கபடி வைக்கலாம்.

முதல்நாள் இப்படியெல்லாம் வைத்து விரதத்தை மேற்கொள்ளவேண்டும். ஒருசிலர் வரலக்ஷ்மி விரத நாளில், காலையிலேயே எழுந்ததும் இப்படி வைப்பார்கள். இதில் தவறேதும் இல்லை.

கலசத்தின் வாய்ப்பகுதியில் மாவிலைக் கொத்துகளை வைக்கவும். பிறகு தேங்காய்க்கு மஞ்சள் குங்குமமிட்டு, மாவிலைக் கொத்தின் மீது வைக்கவும். மஞ்சள் சரடு ஒன்றுடன் மஞ்சள் கிழங்கை எடுத்து அதில் இணைத்து, சொம்பின் கழுத்துப் பகுதியில் கட்டவேண்டும்.

இப்படியாக, கலசத்தை தயார் செய்ததும், தேங்காய்க் குடுமிப் பகுதியில், அம்மன் முகத்தை பதியுங்கள். அம்மன் முகம் இல்லாமலும் கூட செய்யலாம். அம்மனுக்கு, கருகமணி மாலையை சார்த்தவும். இரண்டு பக்கமும் தெரியும் விதமாக, காதோலையை செருகி வைக்கவும்.

கலசத்துக்கு வெள்ளைநிற வஸ்திரத்தை அணிவிக்கவும் அல்லது மஞ்சள் அரக்கு நிற ரவிக்கைத் துணியும் அணிவிக்கலாம். அத்துடன் பூமாலையும் அணிவிக்கலாம். இத்தனையும் சேர்ந்த கலசத்தில், ஸ்ரீமகாலக்ஷ்மியே வந்து எழுந்தருள்வதாக ஐதீகம் 

இந்த கலசம் கொண்ட மணைப்பலகையை, கால்படாமல், தூசு படாத இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, கலசத்துக்கு முன்னே விளக்கேற்றுங்கள். தீபாராதனை காட்டுங்கள். பூஜைக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும்.

அடுத்து இரண்டாம்நாள். அதாவது விரதநாள். காலையில் எழுந்து குளித்து, குங்குமமும் தலைக்குப் பூவும் வைத்துக் கொண்டு, பூஜையறையில் சின்னதான மண்டபம் போல் அமைத்துக் கொள்ளுங்கள். இதில் சின்ன முக்காலியில் கலசம் வைக்கலாம். அதில் கோலமிட்டு, நுனி இலையை வைத்து, பச்சரிசி பரப்பிவைப்பது சிறப்பு. சிலர், அரிசிக்குப் பதிலாக நெல் பரப்பி வைப்பார்கள்.

முதல்நாள் பூஜித்து வைத்திருந்த அம்மன் முகம் கொண்ட கலசத்தை, இரண்டு சுமங்கலிகள் தூக்கிவந்து, பரப்பிவைக்கப்பட்ட அரிசியின் மீது வைக்கவேண்டும். கிழக்கு முகமாக அம்மன் இருப்பது நல்லது.

அடுத்து, புது மாலையையும், பூச்சரத்தை கலசத்துக்கு அணிவியுங்கள். கலசத்துக்கு முன்னே விளக்கேற்றுங்கள். இந்த பூஜையை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமின்றி, அக்கம்பக்கத்தார், உறவுப் பெண்கள் ஆகியோரை அழைத்தும் செய்யலாம்.

கலசத்தை தூக்கி வரும் போது, 

"ஓம் தேவி நமோ நம;
ஆதி லஷ்மியே நமோ நம;
தன லஷ்மியே நமோ நம;
தான்ய லஷ்மியே நமோ நம;"

என்ற துதியை பாடி எடுத்து வரலாம். அதன் பிறகு, நோன்புச்சரடை எடுத்துக் கொள்ளவேண்டும். மெலிதான நூலில், தண்ணீரும் மஞ்சளும் கலந்தால் நோன்புச்சரடாகி விடும். இந்தச் சரடை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக் கொள்ளலாம்.

‘என் வீட்டுக்கு வந்து அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மித் தாயே. எப்போதும் எங்கள் இல்லத்தில் இருந்து, வேண்டும் வரங்களைத் தந்து காத்தருள்வாய் அம்மா’ 

என்று வேண்டிக் கொண்டு, லக்ஷ்மி ஸ்லோகங்களை பாராயணம் செய்து, தீபாராதனை காட்டி, கலச பூஜை செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை அல்லது பாயசம் முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

பிறகு அம்பாளை மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச் சரடை பெண்கள் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அடுத்து ஆண்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். கணவரின் கையால் நோன்புச்சரடைக் கட்டிக் கொள்வது கூடுதல் பலனையும் நிறைவையும் தரும்.

விரதமிருப்பவர்கள், காலையில் உணவெடுத்துக் கொள்ளாமல் விரதம் நிறைவு செய்வது நல்லது. முடியாதவர்கள், கஞ்சி, பால் முதலானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

அக்கம்பக்க சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு முதலான மங்கலப் பொருட்கள் வழங்கலாம். நைவேத்திய பிரசாதம் கொடுக்கலாம். முடிந்தால் புடவை வழங்கலாம்.

மாலை அல்லது மறுநாள் காலை கலசம் கொண்ட லக்ஷ்மிக்கு பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து கலச அலங்காரங்களை எடுத்து அதாவது விசர்ஜனம் செய்து நமஸ்கரிக்கவேண்டும்.

கீழே பரப்பிவைக்கப்பட்ட நெல் அல்லது அரிசியை, துணி ஒன்றில் முடிந்து, அதை அரிசிப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டால், வீட்டில் உணவுக்கு என்றுமே பஞ்சமே இருக்காது என்பது ஐதீகம்.

கலசத் தேங்காயை அடுத்து வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று, பாயசம் முதலான நைவேத்தியத்துக்குப் பயன்படுத்தலாம். இதில், முடிந்துவைத்திருக்கும் அரிசியைச் சேர்த்தும் பிரசாதம் படைக்கலாம்.

இந்த வரலக்ஷ்மி பூஜையை அனுஷ்டித்தால், முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கல்யாண வரம் கைகூடிவரும். குழந்தைச் செல்வம் கிடைக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும். ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம் !

வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள் :

மண்டபத்திற்கு அலங்கார பொருட்கள்

1. சின்ன வாழைக்கன்று இரண்டு.
2. தோரணம்.
3. மாவிலை.
4. முகம் பார்க்கும் கண்ணாடி.
5. பூச்சரம்.

அம்மன் அலங்காரத்திற்கு.

1. அம்மனை வைக்க சொம்பு.
2. காதோலை இரண்டு பக்கமும் வைக்க
3. கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
4. மாவிலைக்கொத்து மற்றும் தேங்காய், அம்மன் வைக்க
5. தாழம்பூ
6. ஜடை அலங்காரம்.
7. சிறிய தேங்காய்.
8. சிறிய வாழை இலை
9. புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)

பூஜைக்கு தேவையான பொருட்கள் :

1. திருவிளக்கு, எண்ணை, நெய், திரி.
2. பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள்.
3. பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4. மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், விபூதி, அட்சதை, வெற்றிலை, பாக்கு.
5. ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6. மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7. பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8. கோலம் போட தேவையான பொருட்கள்.
9. மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
10. பசும்பால்.

நைவேத்தியங்கள் :

1. இட்லி
2. அப்பம்
3. உளுந்து வடை
4. கொழுக்கட்டை 
5. வெல்ல பாயசம்
6. சுண்டல்

பழ வகைகள் :

1. வாழைப்பழம்
2. எலுமிச்சை பழம்
3. ஆப்பிள்
4. ஆரஞ்சு
5. திராட்சை 

பூஜை முடிந்த பின், அர்க்கியம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். 

மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும்.

பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். 

மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும். 

அம்மன் வைத்த அரிசியை, கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.

ஓம் நமசிவாய 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top