அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் பற்றிய பதிவுகள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்னும் ஊரில் அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாகங்களுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில் நாககன்னி சிற்ப வடிவில் காட்சியளிக்கிறாள்.

இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளனர். நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவாரபாலகர்களாக அமைத்துள்ளனர்.

மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. இது வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாக தருகிறார்கள்.

நாகராஜர் சன்னதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர், காசி விஸ்வநாதர், கன்னிமூல கணபதி ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.

பிரகாரத்தில் காவல் தெய்வமான நாகமணி பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

இக்கோயிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்தகிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பிரம்மோற்சவமும் இவருக்கே நடைபெறுகிறது.

பெருமாள் கோயில் கொடிமரங்களின் உச்சியில் கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்தகிருஷ்ணர் சன்னதி கொடிமரத்தில் கருடனுக்கு பதிலாக ஆமையை வடித்துள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடிமரத்தில் வடிக்கவில்லை.

இக்கோயில் வாசலை, 'மகாமேரு மாளிகை" என்று அழைக்கிறார்கள். இக்கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி அமைந்துள்ளது. இச்சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை 'தீர்த்த துர்க்கை" என்று அழைக்கிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை 'அம்மச்சி" என்று அழைப்பது போல இந்த துர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாக கருதி 'அம்மச்சி துர்க்கை" என்று அழைக்கிறார்கள்.

தை மாதத்தில் பிரம்மோற்சவம், ஆவணி ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாக தோஷம் மற்றும் ராகு, கேது தோஷ நிவர்த்திக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்தும், பாலபிஷேகம் செய்தும், கோயில் வளாகத்தில் நாக பிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top