திருப்புன்கூர் என்ற இடத்தில் உள்ளது, சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில். இத்தல மூலவர் புற்று மண்ணால் ஆனவர். இந்த ஈசனை ஆராதித்தால் தோல் நோய், புற்று நோய், வறுமை, தரித்திரம் அகலும். கொள்ளிடக்கரை ஓரம் உள்ள புங்க மரங்கள் சூழ இருக்கும் இடம், திருப்புங்கூர். தற்போது இந்தப் பகுதி ‘திருப்புன்கூர்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
இத்தல இறைவனையும், இறைவியையும் தரிசிக்க, ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் வந்திருந்தார், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதுபற்றி அறிந்ததும் அந்தப் பகுதி மக்களும், மன்னன் ராஜேந்திரச் சோழனும் உள்ளம் மகிழ்ந்தனர். திருப்புன்கூர் முழுவதும் மழையில்லாமல் வறண்டு பஞ்சம் தலைவிரித்தாடிய தருணம் அது. ராஜேந்திரச் சோழன் ஓடோடி வந்து சுந்தரரைப் பணிந்து, “மழை பெய்ய அருள்புரிய வேண்டும்” என்று வேண்டி நின்றான். உடனே சுந்தரர், திருப்புன்கூர் ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுத்தால், கோரிக்கையை நிறைவேற்றுவதாக மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் சம்மதம் தெரிவித்து விட்டான்.
இதையடுத்து ஈசனை வேண்டி பதிகம் பாடினார், சுந்தரர். வான்மழை, விடாது பெய்யத் தொடங்கியது. அந்த வான் மழையிலும், இறைவனின் அருள்மழையிலும் மன்னனும் மக்களும் ஆனந்தமாக நனைந்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. மழை மிகுதியைக் கண்ட மன்னன், ‘மழையை நிறுத்தாவிட்டால் பெருஞ்சேதம் உண்டாகுமே’ என்று அஞ்சினான். மழையை நிறுத்துமாறு, சுந்தரரிடம் மீண்டும் வேண்டி நின்றான். சுந்தரரோ, “மீண்டும் இத்தல ஈசனுக்கு 12 வேலி நிலம் கொடுக்க வேண்டும்” என்று கேட்க, அதனையும் மன்னன் கொடுத்தான். உடனே சுந்தரர் மீண்டும் பதிகம் பாடி மழையை நிறுத்தினார்.
இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இன்னும் இங்கு ‘பன்னிரு வேலி’ என்ற ஊர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் கூட மழை இல்லாதபோது நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இங்கு வந்து ஒரு சிறப்பு பூஜை செய்தால் உடனே மழை பெய்வதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே போல மழைக்காலத்தில் நிற்காது பெய்யும் தொடர் மழையை நிறுத்தவும், திருப்புன்கூர் ஈசனின் அருளைத்தான் நாடுவார்களாம்.
இத்தலத்தில் ஐந்து நிலையுடன் உயர்ந்து நிற்கிறது ராஜகோபுரம். அதனை வணங்கி உள்ளே நுழைந்தால் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு 15 அடி நீளம், 7 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட நந்திதேவர் மூலவரைப் பார்த்த வண்ணம் இல்லாமல், வழக்கத்துக்கு மாறாக 2 அடிக்கு வலப்புறமாக தள்ளி இருந்தபடி காட்சித் தருகிறார். வலது பிரகாரத்தில் முருகப்பெருமானும், தல மரமான புங்க மரமும் உள்ளது. புங்கமரத்தின் கீழ் பஞ்சலிங்கங்கள் உள்ளன. தென் பிரகாரத்தில் ‘குளம்வெட்டிய விநாயகர்’ என்ற பெயரில் இத்தல விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோவிலில் உள்ள ஈசனின் திருநாமம் ‘சிவலோகநாதர்’ என்பதாகும். அவரது உடனுறை சக்தியாக ‘சவுந்தரநாயகி அம்மன்’ தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். தேவார மூவரின் பாடல் பெற்ற ஒப்பற்ற தலம் இதுவாகும். நந்திதேவர் பிரதானமாக விளங்குவதால், இங்கு பிரதோஷ வழிபாடு செய்வது திருக்கயிலையில் பிரதோஷ வழிபாடு செய்வதற்கு இணையானது என்கிறார்கள். இத்தல மூலவர், புற்று மண்ணால் ஆனவர். அதனால் எப்போதும் செப்புக் கவசம் சாத்தி அதற்குத்தான் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு திங்கட் கிழமையும் அர்த்த ஜாம பூஜையின் போது மட்டும் இந்த செப்புக் கவசம் அகற்றப்பட்டு, புற்று மண்லிங்கத்துக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படும்.
இவ்வாலயத்தில் புங்க மரத்தின் கீழ் உள்ள பஞ்ச லிங்கங்களை, பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, 5 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களுக்கு இடையே உள்ள மனப் பிணக்குகள் யாவும் அகலும். திருப்புன்கூர் தல ஈசனை நாம் குடும்பத்தோடு வழிபட்டால் முன்ஜென்ம வினை, மூதாதையர் சாபம் எனும் பித்ரு தோஷம் முதலியன அகன்று போகும். சமீபத்திய சென்னை தொடர் பெருமழையை நிறுத்த அடியவர்களால் இங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சுந்தரரின் இத்தல ‘அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத..’ என்னும் திருமுறை பதிகம்களும் ஓதப்பெற்றன.
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருப்புன்கூர். மயிலாடுதுறையில் இருந்து செல்ல ஏராளமான பஸ்வசதிகள் உள்ளன.