தமிழ்க்கடவுளாக நம்மால் உருவகப்படுத்தி விரதம் இருந்து வழிபாடு செய்யப்படுபவர் முருகப்பெருமான்.
‘அழகு என்ற சொல்லுக்கு முருகன்’ என்று சான்றோர் கூறியுள்ளனர். முருகனின் முகத்தில் பொழியும் கருணையும், உதட்டில் வழியும் மந்தஹாசப் புன்னகையும் நம் உள்ளத்துக் கவலைகளை அழித்து, நல்வாழ்வைத் தருவதாகும்.
ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி மந்திரங்கள் கொண்டு உபாசிக்கப்படுவார்கள். அந்த வரிசையில் முருகனின் மந்திரம் ‘ஷடாட்சரம்’ எனப்படுகிறது. ஐந்தெழுத்துக்களால் ஆன மந்திரம் ‘பஞ்சாட்சரம்’ எனவும், ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்துக்களால் அமைந்த முருகனின் மந்திரம் ‘ஷடாட்சரம்’ எனப்படுகிறது.
‘ச’ எனும் முதல் எழுத்து ‘ஸ்ரீ’யான மகாலட்சுமியையும், ‘ர’ எனும் எழுத்து கரை கடந்த கல்வியையும், ‘வ’ எனும் எழுத்து போக மோஷம் எனும் இம்மை மறுமைப் பயன்களையும், ‘ண’ எனும் எழுத்து சத்ரு சம்ஹாரத்தையும், ‘ப’ எனும் எழுத்து ம்ருத்யுஜயத்தையும், ‘வ’ எனும் எழுத்து நோயற்ற வாழ்வையும் குறிக்கிறது. இந்த மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று ஜபம் செய்பவர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று ஏற்றம் பெறுவர்.
மும்மூர்த்திகளில் முதல்வரான சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அன்னை பார்வதியின் ஒரு முகத்தையும் தன்னுள் இணைத்து ஆறுமுகங்களுடன் விளங்கும் சண்முகன், ஈஸ்வரன் – ஈஸ்வரியின் அம்சமாகவே விளங்குகிறார்.
முருகனின் வரலாறு மனித இனத்தின் கோட்பாடுகளான வீரம், பாசம், இல்லறம், மொழிப்பற்று, நட்பு, கருணை போன்ற பலவற்றை உள்ளடக்கியது. இவற்றிற்கு சான்றாகத் திகழ்கின்றன முருகனின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலங்களான அறுபடை வீடுகள்.