சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர்.
பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மகத்துவங்களை தந்தருளும்.
அதாவது தேய்பிறை அஷ்டமியில், அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஐதீகம்.
பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் :
பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும்.
இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இழந்த பொருட்களை மீண்டும் பெற, பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்ப கிடைக்கும்.
குழந்தை செல்வம் பெற, திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளி பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களை தரமாட்டார். எனவே, பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் மற்றும் தோஷங்கள் யாவும் நீங்கும்.
தடைபட்ட திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்றவை அகலும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.