அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி.
துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்தது போல் ஆனந்தமடைவேன் என்று மஹாவிஷ்ணுவே கூறியுள்ளார்.
துளசி மூலிகை செடியாகும். இது கோயில் பூஜைக்கு மட்டுமல்லாமல் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தபடுகின்றது. இது கோயில்களில் உள்ள பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படலாம். இப்போது வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.
துளசிக்கு ஒரு மருத்துவ குணம் உண்டு. துளவம், மாலலங்கல், ஸ்ரீ துளசி, பிருந்தை, ராம துளசி, விஷ்ணுபிரியா, துழாய், ரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காடு துளசி என பல வகைகள் உண்டு.
துளசி மாலையை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். துளசியை பறித்து 3 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.
இறைவனுக்காக துளசியை பறிக்கும் போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசியை பறிக்கலாம்.
மேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும் போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது, கொம்புள்ள கிளைகளை முறித்தல் கூடாது.
இவ்வாறு நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவர் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.