நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நம் தலை எழுத்தையே மாற்றவல்ல பிரம்மா காயத்ரி மந்திரம் பற்றிய பதிவுகள் :

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவனே படைக்கும் கடவுளாக திகழ்கிறார். ஒவ்வொரு மனிதனின் தலை எழுத்தையும் இவர் தன் பிரம்ம தண்டம் கொண்டு எழுதுகிறார் என்று நம்பப்படுகிறது. 

இவர் எழுதிய தலை எழுத்தை மாற்றும் வல்லமை இவருக்கு உண்டு. ஆகையால் பிரம்ம தேவனை வணங்கும் சமயத்தில் நாம் அவருக்குரிய மந்திரத்தை சொல்வதன் பயனாக அவர் நமக்கு பல நன்மைகளை புரிவார்.

பிரம்மா காயத்ரி மந்திரம் :

‘ஓம் வேதாத்மகாய வித்மஹே 
ஹரண்ய கர்ப்பாய தீமஹி 
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’

பொருள்: 

வேதங்களை உருவாக்கிய பரம்பொருளே, ஹரண்யன் என்னும் பெயரை கொண்ட பிரம்ம தேவரே, உங்களை நினைப்போருக்கு நன்மைகளை அள்ளித்தந்து காத்தருள்பவரே உங்களை வணங்குகிறோம்.

பிரம்ம தேவனை வணங்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் அவர் நம் வாழ்வில் உள்ளே சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வை கொடுப்பார். 

பிரம்ம தேவர் வழிபாடு :

பிரம்ம தேவர் கல்வி மற்றும் கலைகளின் தெய்வமான கலைவாணி எனப்படும் சரஸ்வதி தேவியின் மணாளன் ஆவார். பொதுவாக பூமியில் சிவன் மற்றும் பெருமாளுக்கு அதிக கோவில்கள் இருக்கின்றன. ஆனால் படைப்பு கடவுளான பிரம்மதேவனுக்கு கோவில்களே இல்லாமல் போய்விட்டது. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பிரம்மதேவருக்கு பாரதத்தில் கோயில்கள் இருக்கின்றன. 

புதுமைகளை படைக்கும் படைப்பாற்றலை மனிதர்களுக்கு வழங்கும் பிரம்மதேவரை முறைப்படி வழிபவர்களுக்கு சிந்தனைத் திறன் மேம்படும். வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலும் பிரம்மனை வழிபடுபவர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

பிரம்மா வழிபாட்டிற்குரிய தினங்கள் படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது. மனிதனின் சிந்தனைக்கும், கலை ஞானத்திற்கும் காரகத்துவம் வகிக்கும் கிரகம் புதன் ஆவர். 

எனவே வாரந்தோறும் வரும் புதன் பகவானுக்குரிய புதன் கிழமைகளில் பிரம்மதேவருக்கு வீட்டில் இருக்கும் பூஜையறையில் வெள்ளை நிற தாமரைப்பூ சமர்ப்பித்து, நெய் தீபங்களேற்றி பிரம்மதேவருக்குரிய காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபட்டு வருவதால் வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

பிரம்மா வழிபாடு பலன்கள் :

மும்மூர்த்திகளில் முதன்மையானவரான பிரம்மதேவரை தினமும் பிரம்ம காயத்ரி மந்திரம் துதித்து வழிபடுவர்களுக்கு உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் தெய்வீக ஆற்றலால் நிறையும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல்கள் உண்டாகும். வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கான வழிமுறைகள் கிடைக்கப்பெறுவார்கள். 

முன்னோர்கள் மற்றும் தெய்வங்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். கல்வி, கலைகளில் சிறப்பான நிபுணத்துவம் பெற்று, புதுமைகளை படைத்து மிகுந்த செல்வமும், புகழும் ஈட்டுவார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top