பக்தவத்சல ஸ்ரீபாலா த்ரிபுரசுந்தரி கடாஷம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பக்தவத்சல ஸ்ரீபாலா த்ரிபுரசுந்தரி கடாஷம் பற்றிய பதிவுகள் :

வாத்சல்யம் என்பது, 'வத்ச' என்றால் கன்று, தன்னுடைய கன்றிடம் தாய் பசு காட்டும் அன்பை ,'வாத்சல்யம்' என்பர். ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு கீழ் இருக்கும் சாமானிய மக்களிடம் இறங்கி வந்து வாஞ்சையுடன் பழகுவதற்கு பெயர், வாத்சல்யம்.

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகியாகிய மஹாத்ரிபுரசுந்தரி, தன்னுடைய பக்தர்களுடைய மேன்மைக்காக ,மிகுந்த வாத்சல்யத்துடன் எடுத்த குழந்தை வடிவமே, பாலா திரிபுரசுந்தரி.

ஓர் அரசியிடம் பழகும் பொழுது, பயம் கலந்த பக்தி இருக்கும் , ஆனால் குழந்தையிடமோ அப்படி கிடையாது, அன்பு மிகுந்து இருக்கும். தன் பக்தர்களிடம் மிகுந்த வாஞ்சையுடன் உரிமையோடு விளையாட வந்த தெய்வம்! பக்கத்தில் வந்தமர்ந்து நம் குறைகளை கேட்டு துயர் தீர்க்கும் தெய்வம்! கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தெய்வம்!

ஒரு தாய் தான் குழந்தையிடம் காட்டும் பாசத்திற்கு பெயர் , வாத்சல்யம்.‌ இங்கோ அந்த ஜகன்மாதாவே குழந்தை வடிவம் ஏற்று பக்தனை ரக்ஷிக்க வருகிறாள். ரக்ஷிக்க மட்டுமா வருகிறாள் ? பக்தனுடைய கள்ளம் கபடமற்ற பக்தியை ருசிக்க வருகிறாள். 

இந்த பாலையினுடைய பிஞ்சு பாதங்களை பிடித்து கொண்டால் போதும், இல்லாமை என்பதே நம் வாழ்க்கையில் கிடையாது. சௌபாக்கியத்திற்கு குறைவே இருக்காது. 

இவளுடைய லீலா விநோதங்களுக்கு அளவேயில்லை. இவளுடைய கருணையை விவரிக்கும் ஒரு விசேஷமான ஸ்லோகம் உண்டு. சுருக்கமாக சொல்கிறேன் இங்கு.

ஒரு பக்தன் பரம வறுமையில் வாடிக்கொண்டு இருந்தான். இந்த வறுமையின் பிடியில் இருந்து விடுபட ஸ்ரீ உபாஸனையை மேற்கொண்டான். அவன் பக்தியை மெச்சி ப்ரசன்னமான லக்ஷ்மி தேவி பக்தனை பார்த்து திருவாய்மொழிந்தாள், "பக்தா, பூர்வ ஜன்மத்தில் நீ செய்த தவற்றின் பலனாக, பிரம்மன் உன் தலையெழுத்தில் ' ஸ்ரீ க்ஷய ' என்று எழுதி விட்டார். ஆகையினால் இந்த ஜன்மாவில் உனக்கு ஸ்ரீ பிராப்தி கிடையாது. ஆகையினால் உன்னுடைய தவத்திற்கு ஏற்ற ஸ்ரீ ப்ராப்தியை அடுத்த ஜன்மாவில் நீ பெறுவாய் ."

இதை கேட்டு திடுக்கிட்ட பக்தன் தேவியிடம் மேலும் மன்றாடி வேண்டினான். இந்த வறுமையில் இருந்து உடனே விமோசனம் கிடைக்கும் உபாயத்தை வேண்டினான். கருணையே வடிவமான தேவி அவனுக்கு ஒரு உபாயத்தை சொல்லி மறைந்தாள் .
பக்தனே , ஒரு நல்ல குருவிடம் சென்று, குரு சேவையில் ஈடுபட்டு பாலா த்ரிபுரசுந்தரியின் உபாஸனையை பெற்றுக்கொள். ஸ்ரத்தையாக குரு வாக்கியம் தவறாமல் பாலா த்ரிபுரசுந்தரியை நித்தம் உபாசித்து வா. பாலையின் அருள் இருந்தால் பிரம்மன் எழுதிய தலையெழுத்தும் மாறும்,அவள் அருளால் இந்த ஜன்மாவில் நீ ஸ்ரீ ப்ராப்தியை அடைந்து சௌபாக்கியமானாக திகழலாம் !!!

தேவியினுடைய அறிவுரைப்படி, அந்த பக்தன் ஒரு உத்தம குருவை அடைந்து ,குரு சேவையில் ஈடுபட்டு பாலா த்ரிபுரசுந்தரியை மிகுந்த பக்தியுடன் நித்தமும் உபாசித்து வந்தான். 

பக்தனுடைய உபாஸனையிலும் , குரு பக்தியிலும் மகிழ்ந்த தேவி, ஒரு நாள் பிரசன்னமாகி தன்னுடைய குங்கும பூ பூச்சு பதிந்த பிஞ்சு பாதத்தால் பக்தனுடைய தலையில் பிரம்மன் எழுதிய தையெழுத்தை விளையாட்டாக மாற்றினால். பிரம்மன் எழுதிய ' ஸ்ரீ க்ஷய ' ( ஸ்ரீ - சம்பத்து , க்ஷய - நாசம் ) என்பதை 'யக்ஷ ஸ்ரீ' ( யக்ஷ - குபேர , ஸ்ரீ - சம்பத்து )என்று மாற்றினாள். 'சம்பத்து நாசம்' என்று இருந்ததை ,' குபேர சம்பத்து' என்று ஒரு க்ஷணத்தில் மாற்றிவிட்டாள்!!!

 ' க்ஷய' ( நாசம் ) என்பதை திருப்பி எழுதினால், 'யக்ஷ' ( குபேரன்) என்று வரும் !! அப்புறம் என்ன ? பக்தனுடைய தரித்திரத்தை ஒரு நொடியில் மாற்றி அமைத்து இகபர சௌக்யங்களை இந்த ஜன்மாவில் அடையும் படி அனுக்கிரஹம் செய்துவிட்டாள்.

குரு அருளும், அம்பாளுடைய அருளும் ஒருவனுக்கு இருக்குமானால், தலையெழுத்தையும் மாற்றி விடலாம் !! இவள் அருள் இல்லையேல் இவளது சிலா விக்கிரகத்தை கூட தரிசிக்க இயலாது ஸ்ரீபாலா திரிபுர சுந்தரியை தரிசிக்க நம் நினைப்பு மட்டும் போதாது அவளது அழைப்பும் வேண்டும்.இவளுக்கு பிரசித்திபெற்ற திருத் தலம் சென்னைக்கு அருகில் (OMR) திருப்போருர் செங்கல்பட்டு சாலையில் செம்பாக்கம் கிராமத்தில் ஆகம படி அமைந்த ஆலயமாக , கொடிமரம் ஸ்வர்ண விமானம், மூலவ உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளாள், பாலாம்பிகைக்கு புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்சவ பெருவிழாவாக கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி, இலட்சார்ச்சனை , யாகபூஜை, அலங்காரம் உட்பிரகார உலா என பதினைந்து நாள் நடைபெறும் குழந்தை தெய்வத்தின் திருவிழாவாகும். நம் நெஞ்சை கொள்ளை கொள்ளும் எட்டு வயது சிறுமியாக பேரழகிமூலவர் பாலா தரிசனம் தரும் சமஸ்தானம். இத்தலத்தில் வருடத்திற்கு நான்கு நவராத்திரி நடைபெறும் ஸ்ரீவித்யை தலமாகும்,ஸ்ரீமத் ஔஷத லலிதா மஹா திரிபுர சுந்தரி ராஜதர்பார் சாம்ராஜ்யத்தின் இளவரசி ஸ்ரீபாலா அருளாட்சி கான கண் கோடி வேண்டும். 

நவகோடி சித்தர்கள் தலைவியான இந்த பாலையின் அருள் இருந்தால் தான் உபாசனை கைகூடும். இவள் நினைத்தால் தான் சாஸ்திர நுணுக்கங்கள் புலப்படும். இவளுடைய தயை இருந்தால்தான் த்யான நிலை கைகூடி 'உன்மனி' நிலையை அடைய முடியும். பாலையின் உபாஸனை இல்லையெனில் ஸ்ரீ வித்யை பலனளிப்பதில்லை!!! .

ஓம் ஸ்ரீமாத்ரே நம: 
ஓம் ஸ்ரீகாமாஷியை நம: 
ஸ்ரீமத் லலிதாயை நம: 
ஸ்ரீபாலாயைநம:

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top