பொதுவாக நவக்கிரகங்களை வழிபடுவது என்பது நம்முடைய எல்லா விதமான தோஷங்களையும் போக்கக்கூடிய அற்புதமான பரிகாரமாக இருந்து வருகிறது. எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் நவகிரக வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய சக்தி நவகிரகங்களுக்கு உண்டு. இத்தகைய நவக்கிரக வழிபாடு முறையாக செய்யாவிட்டால் பலன் கிடைக்காது.
நவகிரகங்களை வழிபடும் போது செய்யக்கூடாத தவறு என்ன? நவகிரகங்களை வழிபடும் முறை என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் விரிவாக நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
நவக்கிரஹ வழிபாடு செய்வது அனுதினமும் பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான வழிபாடு ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது. அந்தந்த நாட்களில் அந்தந்த கிரகங்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷம் நீங்கி வாழ்வில் நல்ல ஒரு மாற்றம் நிகழும் என்கிற ஐதீகம் உண்டு.
மற்ற தெய்வங்களை காட்டிலும் நவகிரகங்களுக்கு நீங்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றால் புதிய விளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது. எனவே வீட்டிலிருந்தே புதிய அகல் விளக்குகளை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.
நவகிரகங்களை ஒருபொழுதும் தொட்டு வணங்கக் கூடாது, இது மிகப் பெரிய பாவச் செயலாகும். மற்ற தெய்வங்களைப் போல நவகிரகங்களை அருகில் சென்று அவர்களுடைய பாதத்தை தொட்டு வணங்கக் கூடாது.
நவகிரகங்களுக்கு வலம் வர வேண்டிய விதிமுறை உண்டு. ஒரு முறை அல்லது ஒன்பது முறை நவகிரகங்களை வலம் வருவது முறையாகும். மூன்று முறை வலம் வருவது அல்லது மாற்றி மாற்றி வேறு வேறு திசையில் வலம் வருவது என்பது கூடாது.
எனவே நவக்கிரகங்களை 9 முறை முறையாக வலம் வந்து வழிபடுங்கள். வலம் வரும் பொழுது நீங்கள் எந்த நாளில் நவகிரகங்களை வழிபடுகிறீர்களோ அந்த நாளுக்கு உரிய கிரகத்தில் இருந்து சுற்றுகளை ஆரம்பிக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை என்றால் சூரிய பகவான் சிலையில் இருந்து சுற்ற ஆரம்பிக்க வேண்டும். அது போல ஒவ்வொரு கிழமைக்கும் உரிய கிரகங்களில் இருந்து ஆரம்பித்து ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
நிழல் கிரகங்களுக்கு வலமிருந்து இடம் சுற்ற வேண்டும் என்று சிலர் கூறுவது உண்டு. அது மிகவும் தவறான செயலாகும். ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்களுக்கு தனியாக வலம் வரக்கூடாது. எல்லா கிரகங்களுக்கும் சேர்த்து இடமிருந்து வலம் மட்டுமே நீங்கள் சுற்றி வர வேண்டும், வலமிருந்து இடமாக சுற்றி கூடாது.
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், அந்த கோவிலில் இருக்கும் மூலவரை முதலில் தரிசனம் செய்ய வேண்டும். அவரை வணங்கி விட்டு, பின்னர் உப தெய்வங்களையும் வணங்கி இறுதியாகத் தான் நவ கிரகத்திற்கு வந்து நிற்க வேண்டும். முதலிலேயே நவகிரகத்தை வணங்குவது என்பதும் தவறான செயலாகும்.
நவகிரகங்களுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுவது அல்லது நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் தானம் செய்வது, அந்தந்த கிரகங்களுக்கு உரிய மலர்களை சாற்றி வழிபடுவது என்பது மிகவும் விசேஷமானது, எனவே உங்கள் ஜாதக ரீதியான தோஷங்கள் நீங்க அந்தந்த கிரகங்களை முறையாக வழிபட்டு பயன்பெறுங்கள்.