தீபாவளியானது தீபங்களின் திருவிழா. இது நவம்பர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் இந்த பண்டிகை நரகாசுர வதம் தந்தேராஸ் நாளில் தொடங்கி பையா தூஜ் பண்டிகையுடன் முடிவடைகிறது.
கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, காளி பூஜை, யம துவிதியை, மார்வாரிப் புத்தாண்டு, பஹு பீஜ் என தீபாவளியை ஒட்டிய ஒருவார காலமும் பண்டிகையாக பல மாநிலங்களில் பலவிதங்களில் கொண்டாடுகின்றனர்.
செல்வம் பெருகும் தன திரயோதசி அக்டோபர் 23ஆம் ஆம் தேதி யம திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
தன திரயோதசி
தன திரயோதசி நாளில் செல்வ வளம் பெருகும் வகையில் நம் வீட்டில் உள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் இந்த நாட்களில் முதலீடு செய்யப்படுகிறது.
அக்டோபர் 23ஆம் தேதி ஐப்பசி 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று,தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் வாங்குவதற்கு உகந்த நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிறிதளவேனும் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
தீபாவளி பண்டிகை
நரக சதுர்த்தசி நாள் ஐப்பசி மாதம் 7ஆம் தேதி அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையை உடல் முழுதும் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
அதில் நாயுருவி இலை சுரைக்காய் கொடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். இதனால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி பூஜை செய்ய முகூர்த்த நேரம் காலை 6.53 மணி முதல் 8.16 வரையாகும்.
நல்லெண்ணெய் குளியல்
பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வர கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் விதி விலக்கு உள்ளது. இதனால் ஆரோக்கியம் உண்டாகும். உடலில் உள்ள சூடு குறையும். அதனால் வியாதிகள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.
குளித்து முடித்த உடன் சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்திர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம்.
பட்டாசு வெடிப்பது ஏன்
ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது. திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு யம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.
அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை
அமாவாசை நாளில் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சூரியனும் சந்திரனும் சுக்கிரனின் வீட்டில் உள்ள தினம். அதனால் அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
லட்சுமி குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பக்ஷணம் வைத்து தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். அன்றைய தினம் கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும். .
கேதார கௌரி நோன்பு
தீபாவளிக்கு மறுநாள் கௌரி நோன்பு என்று அழைக்கப்படும் நோன்பானது, வீட்டில் இருக்கும் பெண்களால், கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், மண்ணால் தயார் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு, காலையிலிருந்து உணவு ஏதும் அருந்தாமல் விரதம் இருந்து மாலையில் வில்வம், அரச இலை மற்றும் ஆல இலை ஆகியவற்றை கொண்டு சிவனுக்கு பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, மறுநாள் காலை வரை பூஜைகள் செய்யப்படுகிறது. பின்னர் விரதம் நிறைவு பெற்று பெண்கள் பால் பழம் அல்லது சிறு உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடிக்கிறார்கள். இதனால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.
யம துவிதியை
அமாவாசை முடிந்து அக்டோபர் 26 ஆம் தேதி புதன்கிழமை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி கொண்டாட வேண்டும். எனவேதான் இந்த 5 நாட்கள் தீபாவளி பண்டிகை சாஸ்திரம் கூறுகிறது.