தீபாராதனை, கோயில்களில் நிகழும் பூஜைகளின் ஒரு பகுதியாக இடம்பெறும் ஒரு நிகழ்வு ஆகும். இது பூஜையின் ஒரு முக்கிய கட்டமாக அமைகின்றது. தீபாராதனையின் போது அர்ச்சகர் பல வகையான தீபங்களை இறைவன் திருவுருவத்துக்கு முன்னர் காட்டுவார்.
நித்தியம், நைமித்தியம், காம்யம் என்று சொல்லப்படும் அன்றாடப் பூஜை, காரணம் குறித்த பூஜை, விளைவு கருதிய பூஜை என்னும் மூவகைப் பூஜைகளிலும் தீபாராதனை இடம்பெறுகின்றது.
பூஜை நிகழ்வுகளின் ஒழுங்கில் நைவேத்தியம் எனப்படும் உணவு படைத்தலுக்குப் பின்னர் தீபாராதனை தொடங்கும்.
தீபாராதனைக்கு உரிய தீபங்கள் பெரும்பாலும் பித்தளை போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன.
பூஜையின் போது பெரிதும் பயன்படும் தீபங்கள்,
1. ஒரு முக தீபம் அல்லது ஒற்றைத் தீபம்,
2. அடுக்குத் தீபம்,
3. பஞ்சமுக தீபம்,
4. வில்வ தீபம்,
5. இடப தீபம்,
6. கும்ப தீபம்,
7. கற்பூர தீபம்.
இவை தவிர வகை வகையான தீபங்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
1. தூபம்,
2. மஹா தீபம்,
3. அலங்கார தீபம்,
4. நாக தீபம்,
5. விருஷப தீபம்,
6. கற்பகவிருட்ச தீபம்,
7. புருஷாமிருக தீபம்,
8. அஷ்வ தீபம்,
9. கஜ தீபம்,
10. சிம்ம தீபம்,
11. வ்யாக்ர தீபம்,
12. துவஜ தீபம்,
13. மயூர தீபம்,
14. ஐந்தட்டு தீபம்,
15. பூரணகும்ப தீபம்,
16. மேரு தீபம் போன்றவையே அவை.
தீபங்கள் பலவகையாக உள்ளன. அவை,
1. சித்திர தீபம்
2. மாலா தீபம்
3. ஆகாச தீபம்
4. ஜல தீபம்
5. நவுகா தீபம்
6. கோபுர தீபம்
7. சர்வ தீபம்
8. ஏக முக தீபம்
9. நிம்ப தீபம்
1. சித்திர தீபம்:
தரை மீது மாக்கோலம் போட்டு மணி விளக்குகளை ஏற்றி வட்டமாக அமைத்து தீப அலங்காரம் செய்தல் மற்றும் வண்ண வண்ண வடிவங்களை வரைந்து, அவற்றின் மீது விளக்குகளை வைத்து ஏற்றுதல் சித்திர தீபமாகும்.
2. மாலா தீபம்:
மாலா தீபம் என்பது அடுக்கு தீபம் ஆகும். மாலை போன்று தீபத்தட்டுகள் இருபுறம் அமைந்தும், கீழிருந்து மேலாக வட்ட அடுக்கடுக்காக பெரிய அளவு தொடங்கி சிறியனவாக அமைந்து இருக்கும்.
3. ஆகாச தீபம்:
வீடுகளின் மாடியில் அல்லது உயரமான இடங்களில் ஏற்றப்படும் தீபத்தை ஆகாச தீபம் என்றழைப்பார்கள். ஐப்பசி மாதம் தீபாவளிக்கு முன் தினத்திலும், கார்த்திகை மாதம் சதுர்த்தி நாளிலும் ஆகாச தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். ஆகாச தீபம் எமபயத்திலிருந்தும் கெட்ட கனவுகளிலிருந்தும் விடுபட உதவும்.
4. ஜல தீபம்:
ஜலதீபம் என்பது நீரில் மிதக்கவிடுகிற சின்னஞ் சிறிய தீபவிளக்குகளாகும். கங்கைக்கரையில் அமர்ந்து, கங்கை நீரில் இது போன்ற தீபங்களை மிதக்கவிட்டு, கங்கையின் தண்ணீர் போகும் திசையில் அவை நாலா திசையும் மிதந்து செல்வதை கண்டு களிப்பார்கள். ஹரித்வாரில் ஜலதீபம் பிரசித்தமாகும். அனேகமாக வடநாட்டில் பல நதிகளில் ஜலதீபங்கள் மிதக்கவிடுவதை உற்சவமாகவே கொண்டாடி மகிழ்கிறார்கள். பம்பா நதிக்கரையில் மகரசங்கராந்திக்கு முன்தினம், விளக்குகள் நதிநீரில் மிதந்து வரும். அவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஐயப்பனை வரவேற்க பம்பாநதியில் ஜலதீபம் அங்குமிங்கும் ஆடி அசைந்து வருவதுபோல அமைந்திருக்கும். இதை பம்பா ஜலதீபம் என்றும் கும்ப தீர்த்த தீபம் என்றும் சொல்வார்கள்.
5. நவுகா தீபம்:
படகு போன்று வடிவமைத்து அதில் பெரிய தீபமாக ஏற்றி, நீரில் மிதக்கவிடும்போது படகே ஒரு தீபம்போல் மிதந்து செல்வதாகத் தோன்றும். இதற்கு நவுகாதீபம் என்று பெயர். நவுகா என்றால் படகு.
6. கோபுர தீபம்:
கோயில்களில் உள்ள கோபுரங்களின் மீது ஏற்றப்படும் தீபங்களே கோபுரதீபம். திருவண்ணாமலையிலுள்ள மலை 2600 அடி உயரமானது. கார்த்திகை நாளில் இம்மலை மீது தீபம் ஏற்றப்படும் செப்புக் கொப்பறையில், நெய் ஊற்றி, கற்பூரம், கோடியான வெள்ளைத் துணி இவற்றுடன் ஏற்றப்படும் தீபம் பலமைல்கள் தூரம் பிரகாசமுடன் தெரியும். அணையாமல் சில நாட்கள் எரிந்த வண்ணமிருக்கும். ரிஷபவாகனத்தில் அண்ணாமலையார் திருவீதி ஊர்வலம் வருவதும், மலை மீது மகாதீபம் சுடர்விட்டு எரிவதும் ஆகாசதீபத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவதாக இருக்கும். கோயில்களின் முன்னால் உள்ள இடத்தில் சொக்கப்பனை நிகழ்த்துவதும் தீபவகையைச் சார்ந்ததுதான். இந்த சொக்கப்பனை எரிப்பதை சர்வாலய தீபம் என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.
7. சர்வ தீபம்:
எல்லாவற்றிற்கும் மேலாக சர்வ தீபம் என்று வழக்கப்படுகிற ஒளிமயப் பிரகாச உத்சவம் மகோன்னதமானது. இல்லங்களில் பூரணமாக வீடு முழுவதிலும் விளக்குகளை ஏற்றி தீபப் பிரகாசம் எங்கணும் வியாபித்து ஒளிமயமாகத் திகழ்வதையே சர்வ தீபம் என்று சொல்கிறார்கள்.
8. ஏக முக தீபம்:
ஏகமுக தீபத்தை, ‘பகவதி தீபம்’ என்றும், ‘துர்கா தீபம்’ என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள். சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது. எனவே தான் லலிதா ஸஹஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏகமுக தீபத்தில் ‘துர்க்கா’ தேவியை ஆவாகனம் செய்து ஸஹஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.
9. நிம்ப தீபம்:
‘நிம்ப தீபம்’ என்பது இலுப்பை எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் மாரியம்மன் திருவருள் பெற இந்த விளக்கை முறைப்படி ஏற்ற வேண்டும். நிம்ப தீபத்தை புது அகண்டம், அகல் இவற்றில் ஏற்ற வேண்டும். வீடுகளிலும் இத்தீபத்தை ஏற்றலாம். தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்த எண்ணெய்யே பஞ்ச தீப எண்ணெய் எனப்படும். பஞ்ச தீப எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.