ஸ்ரீ ஆஞ்சநேயர் வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் வரலாறு பற்றிய பதிவுகள் :

திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். 

ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. 

பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்’ என்று ஆசி கூறினாள். தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. 

பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரின் சிறப்புகள் :-

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர். ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 

எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே கலங்கச் செய்தவர். பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேருமலையைக் குன்றச் செய்யும் உறுதியான மனோதிடமும் உடையவர் ஆஞ்சனேயர். இவர் சிறந்த கல்விமான்; ஆயினும் அடக்கம் உள்ளிட்ட பண்புகள் நிரம்பப் பெற்றவர். வெற்றியிலும் இவருக்கு இணை யாரும் இல்லை. அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்.

இளம் வயதிலேயே சூரியனைப் பிடிக்கப் பாய்ந்தவர். உலக மக்கள் அனைவருக்கும் ராம நாமத்தை உபதேசிக் கும் ஆசானாக இவர் விளங்குகிறார். நம்முடன் சிரஞ்சீவியாய் இருந்து, நமக்கெல்லாம் ராம நாமத்தின்மீது பற்றை உருவாக்குகிறார். இவரை வணங்கிய மாத்திரத்தில் தைரியமும் ஞானமும் நமக்கு வளரும்; காமம் நசிந்து விடும்.

பாரதப் போரில் அர்ஜுனனின் தேர்க்கொடியில் அமர்ந்து, கிருஷ்ண பகவான் பார்த்தனுக்கு உபதேசித்த பகவத் கீதையை நேரில் கேட்டவர்.
கண்ணனுக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கண்ணன் அர்ஜுனனின் தேரில் சாரதியாக அமர்ந்து இருந்தார். மாருதி பார்த்தன் தேரில் வெற்றிக் கொடியாக இருந்தார். கண்ணன் பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார். ஆஞ்சநேயர் ராம லட்சுமணர்களுக்காக ராவணனிடம் தூது சென்றார். கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோகுலத்து மக்களைக் காப்பாற்றினார். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார்.

இருவருமே விஸ்வரூப தரிசனம் தந்தவர்கள். உலக நன்மைக்காக அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முக வடிவை விரும்பி ஏற்றுக் கொண்டவர் அனுமன். ஆஞ்சநேய ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகி இன்பம் கூடும்.

ஸ்ரீ அனுமன் துதி :

அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே
ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே
ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top