அனுமன் ஜெயந்தி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அனுமன் ஜெயந்தி பற்றிய பதிவுகள் :

மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம்.

சிறப்பான மாதமான மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது

ராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கும் ராமபிரானின் முதன்மை பக்தனாக விளங்கியவர், அனுமன். ராமரின் மேல் கொண்ட பக்தியே, அனுமனையும் வழிபாட்டுக்குரிய தெய்வமாக மாற்றி அமைத்திருக்கிறது. 

மார்கழி அமாவாசை தினமும், மூல நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்தவர், அனுமன். அந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

ராமாயணத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் அனுமன் என்று புராணங்கள் சொல்கின்றன. ராமரின் சிறந்த பக்தனும் ஆவார். எனவே அனுமனை வழிபடுபவர்களுக்கு, சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆகிய இருவரின் ஆசிகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

ராமபிரான், ராவணனுடனான யுதத்தத்தில் வெற்றிகாண்பதற்கு, பக்கபலமாக இருந்தவர் அனுமன். ராவணனின் இருப்பிடத்தில் சீதை இருப்பதை, அனுமன் தான் அங்குசென்று உறுதிப்படுத்தி வந்தார். ராவணப் படைக்கு எதிராக போரிட, ராமபிரானின் பக்கத்தில் சுக்ரீவனின் வானரப் படைகளை இணைக்க பாலமாக இருந்தார். 

ராவணனின் மகன் மேகநாதன் எய்த அம்பால் மூச்சையாகிப் போன லட்சுமணனை காப்பாற்ற, சஞ்சவீ மலையில் உள்ள மூலிகைகள் தேவைப்பட்டபோது, உரிய நேரத்தில் சென்று அந்த மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன்.

இப்படி ராமபிரானுக்கு பல வகையில் பலமாக அமைந்தவர், அனுமன். அவருடைய ஜெயந்தி நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். 

சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். ஆஞ்சநேயரை அவருடைய நாமத்தைச் சொல்லி வணங்குவதை விட, ராமபிரானின் நாமத்தைச் சொல்லி வணங்குவதே அதிக பலனைத் தரும். அந்த அளவுக்கு அவர், ராமபிரானின் மீது பக்தி செலுத்தியவர். ராமநாமம் உச்சரிப்பதோடு, வடை மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தியும் வழிபடலாம்.

அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க வேண்டும். அன்றைய தினம் உணவருந்தாமல், அருகில் இருக்கும் ராமர், அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்யலாம். 

வீட்டில் இருக்கும் அனுமனின் படத்தில், அவருடைய வாலுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வணங்குங்கள். ஏனெனில் அனுமனுக்கு அவரது வாலில் தான் சக்தி அதிகம்.

மேலும் பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். முழு நேரமும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top