ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில். ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் இந்த ஊர் ஆறகளூர் என பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு காமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகின்றார்.
கருவறைக்கு வடபுற தனி சன்னதியில் பெரிய நாயகி அம்பாள் அருள்பாலிக்கின்றாள். இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக மகிழ மரம் உள்ளது. இம்மரத்தடியில் மன்மதன் வழிபட்டதால் இங்குள்ள இறைவனாருக்கு காமநாதீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கருவறையில் ஆனந்த விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை சுற்றி உள்ள பிரகாரத்தில் விநாயகர் தக்ஷிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு, துர்க்கையும், வடபக்கமாக 63 நாயன்மார்களும் வீற்றிருக்கின்றனர்.
இங்கு பிரம்மாவிற்கும் நடராஜருக்கும் தனித்தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி மயில் மீது அமர்ந்து கோலத்தில் காட்சி தருவது இக்கோயிலின் தனி சிறப்புகளில் ஒன்று. கோயிலில் அஷ்ட பைரவர்கள் எட்டு திசைகளில் இருந்து அருள் புரிகின்றார்களாம்.
இவர்களை வழிபட்டால் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நள்ளிரவு 12 மணி அளவில் கால பைரவர் உள்ளிட்ட 8 பைரவர்களுக்கு பூஜைகள் நடக்குமாம். வெள்ளிக்கவசம், சந்தன காப்பு, புஷ்ப அலங்காரம், உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் பூஜை செய்வதால் திருமண தடை, பிரிந்த இளம் தம்பதியர் ஒன்று கூடுவது, குழந்தை பாக்கியம் கிடைப்பது நவகிரக தோஷம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.