மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. 

தேவர்களின் விடிகாலை பொழுதாக போற்றப்படும் மார்கழியில் திருவாதிரைப் பண்டிகை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்

"பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்" என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சேந்தனார் வீட்டுக்கு களி சாப்பிட நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.

சிவபெருமான் சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால் ஆச்சரியப்பட வைக்கும். இறைவனின் நடனமே உலகின் அசைவிற்கு காரணமாக இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் நடனம்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. 

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார். கடவுள் துகள், ஹிக்ஸ் போசான் என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார். கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள். இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.

இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். 

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினந்தோறும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார். 

29ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31ஆம்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது. 

ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4ஆம் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். 

தொடர்ந்து 5ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆருத்ரா தாிசனம் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. 

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. 7ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8ஆம் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும்.

இதனிடையே முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசருக்கு காப்பு கட்டுடன் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5ல் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சியும் அன்று இரவு ராட்டின திருவிழாவும் நடைபெறும். 

மேலும் முக்கிய நிகழ்வான ஜனவரி6 ஆருத்ர தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி நடராஜரும் சிவகாமி அம்மனும் கிரிவலப் பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top