ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விஷேசம் இருக்கும். அதை நாம் ஊற்று நோக்கினால் மட்டுமே நம் கண்களுக்கு தெரியும்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு-தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.
திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.
ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.
திவ்ய தேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோவில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.
பெரும்பாலும் கோவில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ;ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.