சித்தர்கள் வாழும் அற்புதம் வாய்ந்த சதுரகிரி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்தர்கள் வாழும் அற்புதம் வாய்ந்த சதுரகிரி பற்றிய பதிவுகள் :

எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும். எல்லா அமாவாசை நாட்களிலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

சித்தர்கள் உலாவும் அந்த மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும் பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவே தான் அமாவாசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பலநோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். 

சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். 

ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவ புருஷர்களும், சித்தர்களும் தவம் செய்வதாகவும், இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

சதுரகிரி மலை:

சதுரகிரி சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், 

அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் லிங்கத்தை உருவாக்கி அதன் முன் அமர்ந்து தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்ததலமிது. 

கல்லாலமரம் என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை.

சித்தர்கள் வழிபட்ட மலை:

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. 

நான்கு வேதங்களே சிவகிரி விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர் கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவி கிரி. 

இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.

சதுரகிரியில் வாழும் சித்தர்கள்:

சதுரகிரி என்பது கயிலாயத்தைவிட புனிதமானது. ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழவானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். 

ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் காம்யலோகம் கிட்டும் என்றும் கூறியுள்ளார். 

இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

நினைத்தவை நிறைவேறும்:

காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். 

சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் வாழ்வின் அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும். சதுர கிரியில் கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது.

பேய் பிசாசுகளை விரட்டும் தெய்வங்கள்
இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். 

பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி.

சர்க்கரை நோய் குணமாகும்: 

எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்ப சாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். 

வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.

சிறுநீரக கோளாறு நீங்கும்: 

இங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன் கண்நோய், சிறுநீரக கோளாறு உயர்ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும் என்கிறார், கோரக்கர்.

சர்ப்பதோஷம் நீங்கும் நாககன்னி வழிபாடு:

நாக கன்னி தவம் செய்யும் இடம் தற்போது நாக கன்னி காவு என்று இன்றும் அழைக்கப்பெறுகிறது. இங்கு ஆதிசேஷன் மனைவி சிவனை குறித்து தவம் செய்து, இந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனுக்கு பலமும், உற்சாகமும் தருகிறார். 

இந்த ஸ்தலத்தில் திருமணத் தடையான நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம் போன்றவையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் உபாதையும் விலகும் என்கிறது சித்தர் வாக்கு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top