மனிதகுலத்தின் ஆதி தெய்வமாகவும், பிரத்யட்ச தெய்வமாகவும் போற்றி வழிபடப்பெறுபவர் சூரிய பகவான். சூரியனே பூமியின் இயக்கத்துக்கு ஆதார சக்தியாகத் திகழ்கிறது.
வெளிச்சமும் அதன் வெப்பமும் இல்லாமல் உலகமும் இல்லை; உலகத்தின் இயக்கமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சூரியனிலிருந்து தோன்றியதுதான் பூமி. பூமியின் தாயான சூரியனை பிரதான தெய்வமாக வணங்குவது நம் நாட்டவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆதிசங்கரர் ஏற்படுத்திய ஆறு மதங்களில் சௌரம் எனப்படும் சூரியனை வணங்கும் மதமும் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. இன்றும் `சூரிய நமஸ்காரம்' எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத் துக்காகவும் பலராலும் கடைப் பிடிக்கப்படுகிறது.
அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக் கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும் என்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.
மேலும் சூரியபகவானுக்கு என்று அங்கு கோயில்களும் உள்ளன. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய, ஐரோப்பிய, மெசபடோ மிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன.
'சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர்கள் வாக்கு. வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். வேதங்கள் சூரியனை 'ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்' என்று போற்றுகின்றன. நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் 'உச்சிகிழான் கோட்டம்' என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.
சூரியனை வழிபட தை மாதம் முதல் நாள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் 'பானுவார விரதம்' இருந்தால், சூரியனின் அருளினைச் சிறப்பாகப் பெறலாம் என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் நம்பிக்கை.
அகிலத்தை எல்லாம் காக்கும் ஸ்ரீமன் நாராயணன் மானிட வடிவெடுத்து ஸ்ரீராமனாக வந்த போது, அவர் ராவணனைப் போரில் வெல்வதற்குத் துணை புரிந்ததும் சூரிய பகவான்தான். ஆம், சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீராமரை 'ஆதித்ய ஹிருதயம்' எனும் சூரிய ஸ்தோத்திரம்தான் ராவணனை வெற்றிகொள்ளச் செய்தது என்று ராமாயணம் சொல்கிறது. ராவணனுடனான யுத்தத்தில் ஸ்ரீராமர் களைப்புற்ற போது, அகத்திய முனிவர் ஸ்ரீராமருக்கு அருளிய `ஆதித்ய ஹிருதயம்’ எனும் மந்திரம்தான் சோர்வை நீக்கி வெற்றியைத் தந்ததாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது.
அதிகாலையில் தொடர்ந்து ஒன்பது முறை ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். தொடர்ந்து வெற்றிகள் கிட்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.
சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார்.
வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார்.
ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார்.
ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார்.
ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார்.
ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார்.
கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார்.
மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள் ளார்.
தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார்.
மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார்.
பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.
"ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்"
துதிகளில் எல்லாம் சிறந்ததான ஆதித்ய ஹ்ருதயம் எனும் மந்திரத்தை நாளும் ஓதி பாவங்களையும், கவலைகளையும், குழப்பங்களையும் நீக்கிக்கொள்வோம்.