உலகை காக்கும் காஞ்சி காமாட்சியம்மன்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து உலகை காக்கும் காஞ்சி காமாட்சியம்மன் பற்றிய பதிவுகள் :

"அன்னை"என்ற சொல்,அனைவரது மனதிலும் அன்பின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாகும்.

உலக ஆசாபாசங்களை துறந்த முனிவர்களும் கூட,அன்னையின் அன்பையும்,பாசத்தையும் துறக்க இயலவில்லை என்பதை ஆன்மிக சான்றோர்களின் வாழ்க்கை வரலாறு மூலம் அறிந்திருப்போம்.

தமிழக அளவில் அமைந்துள்ள அன்னை பராசக்தியின் அருள் பொங்கும் ஆன்மிக திருத்தலங்களில் அன்பையும்,அருளையும் ஒரு சேர அன்பர்களுக்கு அளிக்கும் அற்புத இடம்,காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் ஆகும்.

காமாட்சி’ என்ற சொல்லுக்கு, ‘கருணையும், அன்பும் நிறைந்த கண்களை கொண்டவள்’ என்பது பொருள்.

அன்னை பராசக்தி அருளாட்சி செய்யும் முக்கியமான தலங்கள் காஞ்சி, மதுரை, காசி. இந்த மூன்று ஊர்களிலும் உள்ள காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி ஆகிய அன்னையர்களில் காமாட்சி தனிச்சிறப்பு பெற்றவள்.

ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் பூரண சொரூபமாகவும், கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகவும் கொண்டவள் இந்த அன்னை என்பது ஐதீகம்.

காஞ்சி காமாட்சி அம்மன், இரண்டு கால்களையும் மடித்து, பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது சிறந்த அம்சமாகும்.கைகளில் கரும்பு வில், தாமரை மற்றும் கிளி ஆகியவை உள்ளன.

தந்திர சூடாமணி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி காஞ்சிபுரம் என்பது 51 சக்தி பீடங்களில், தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த இடமாகும்.

புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற அசுரன், கடுமையான தவங்களை செய்து, பிரம்மாவிடம் பல வரங்களை பெற்றிருந்தான். அதனால், 
மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்ட போது, பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்திக்கு மட்டுமே உள்ளதாக கூறி, பராசக்தியிடம் அவர்களை அனுப்பி வைத்தார், சிவபெருமான். 

அந்த சமயம் அன்னையானவள், ‘காமகோட்டம்’ என்ற காஞ்சிபுரத்தில், கிளி உருவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து ஈசனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு வந்து முறையிட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களிடம், பந்தகாசுரனை வதம் செய்வதாக உறுதியளித்தாள். பல்வேறு வரங்களை பெற்றிருந்த அவனை கொல்ல, பதினெட்டுக் கரங்கள் கொண்ட பைரவ ரூபிணியாக உருவம் கொண்டாள் அன்னை. 

அவனை அழித்து, அவன் தலையை வெட்டி, கையில் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தாள். அவளது உக்கிர வடிவத்தை கண்ட அனைவரும் நடுங்கினார்கள். அதனால், அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணாக அன்னை காட்சியளித்தாள். அன்னை, அவர்களிடம் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டி பந்தகாசுரனை புதைத்து, அதே இடத்தில் வெற்றித் தூண் ஒன்றையும் அமைக்கும்படி கூறினாள்.

அன்னையின் கட்டளைப்படி, தேவர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டிய போது, மல்லகன் என்ற அரக்கன் உள்ளே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அவனை அழித்து தங்களைக் காக்கும்படி, மகா விஷ்ணுவிடம் அனைவரும் வேண்டினார்கள்.

மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்ட போது, அவனது உடலில் இருந்து வெளியான ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு அரக்கனாக மாறி போர் புரிந்தது. அதனால், மகாவிஷ்ணு, சிவபெருமானை உதவிக்கு அழைத்தார்.

சிவபெருமான், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்து, இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் ரத்தத் துளிகள் பூமியில் விழுவதற்கு முன்னரே குடிக்கும்படி கட்டளையிட்டார். அதனால், மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுக்கப்பட்ட நிலையில், மகாவிஷ்ணு சக்ராயுதத்தால் மல்லகனை அழித்தார்.

அதன் பின்னர், அன்னையின் கட்டளையிட்டபடி, பந்தகாசுரனைப் புதைத்தனர். அந்த இடத்திற்கு அருகில் இருபத்து நான்கு தூண்களை நிறுவி, ‘காயத்ரி மண்டபம்’ அமைத்து, அதற்குள் உள்ள அழகிய பீடத்தில் அன்னையின் உருவத்தை வைத்து வழிபட்டு விட்டு நிம்மதியாக திரும்பினார்கள்.

மறுநாள் அதிகாலையில் அந்த ஆலய கதவைத் திறந்தவர்களுக்கு அற்புதமான காட்சி கிடைத்தது.

காயத்ரி மண்டபம் நடுவில், அவர்கள் அமைத்த சிலைக்கு பதிலாக அன்னை காமாட்சி தேவி, கருணை கொண்ட ராஜராஜேஸ்வரியாக காட்சியளித்தாள்.

மண்டபத்தின் மத்தியில் அன்னை தென்கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர், அம்பு, கரும்பு வில் முதலியன இருந்தன.

அந்த நாள் கிருத யுகம், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சம், பிரதமை திதி, பூரம் நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமை நாள் ஆகும். அன்னையின் அழகையும், கருணையையும் கண்ட தேவர்களும், முனிவர்களும் அவள் அங்கேயே அமர்ந்து உலகம் செழிக்க அருள் புரிய வேண்டிக் கொண்டார்கள்.

அதனால், அன்னை காமாட்சி ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அங்கே அருளாட்சி செய்து வருகிறாள்.

காஞ்சிபுரத்தில் அன்னை காமகோடி காமாட்சியின் மூல விக்கிரகம் ஸ்தூல வடிவத்திலும், அஞ்சன காமாட்சி என்ற அரூப லட்சுமியாக சூட்சும வடிவத்திலும், காமகோடி பீடமான ஸ்ரீ சக்கரம் என்ற காரண வடிவத்திலும் அன்னை விளங்குகிறாள்.

காமாட்சியின் இடது பக்கத்தில் வடக்கு திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி, தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். அது அன்னையின் சூட்சும வடிவமாகும். வடிவம் இல்லாத இந்த அன்னையின் மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் அவள் அழகிய வடிவம் பெறுகிறாள்.

காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும், காமாட்சி அம்பிகையே மூல மூர்த்தம் ஆவாள். அதனால், அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் உண்டு.

காமகோடி பீடத்தில் அன்னை தவக்கோலத்தில் இருப்பதால் தான், காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னைக்கு தனிப்பட்ட சன்னிதி கிடையாது என்ற கருத்தும் உண்டு.

8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால், ஸ்ரீசக்ரம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. உக்கிரமாக இருந்த அன்னையை, அழகிய காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தியதாக ஐதீகம்.

இன்றும் கூட அன்னை காமாட்சியின் பிரகாசமான முகத்தை பக்தியுடன் தரிசிக்கும் ஒரு சிலருக்கு அவளது கண்கள் சிமிட்டுவது போன்ற காட்சி கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் சிறப்பாக நடக்கும். இவற்றில் தேர்த் திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாத வசந்த உற்சவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top