சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட காலக்கணிப்பில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் சஷ்டி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
சஷ்டியின் சிறப்புகள் :
சஷ்டி முருகனுக்குரிய சிறந்த நாளாகும். இந்த திதியில் வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வார்.
16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
சஷ்டியில் விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம்.
வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதந்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும்.
அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பது நல்லது.
சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம்.