மந்திரத்தின் முடிவில் ‘ததாஸ்து’ என்று கூறுவதன் விளக்கம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மந்திரத்தின் முடிவில் ‘ததாஸ்து’ என்று கூறுவதன் விளக்கம் :

தது + அஸ்து = ததாஸ்து; அப்படியே ஆகட்டும் என்பது பொருள். இவர்கள் வேண்டுவது கிடைக்கட்டும். எதனை வேண்டி இந்த பூஜையை அல்லது நிகழ்ச்சியை நடத்துகிறார்களோ அது முழுமை பெறட்டும். இவர்களது பிரார்த்தனை பலிக்கட்டும் என்று வாழ்த்தும் வார்த்தை இது. வீட்டிலும் சரி, ஆலயங்களிலும் சரி பூஜைகள் முடிவடையும் தருவாயில் பிரதான ஆச்சாரியார் ‘ஸ்வஸ்தி வசனம்’ என்ற பெயரில் அவ்வாறு நடத்துபவர்களின் பிரார்த்தனைகளைச் (தேவைகளைச்) சொல்லுவார். 

அதற்கு பிரதிவசனமாக உடன் இருக்கும் உப ஆச்சாரியார்கள் ‘அப்படியே ஆகட்டும்’ என்று ஆசீர்வதிப்பர். ஆலயங்களில் நடத்தப்பெறும் பூஜைகளில் பொதுமக்களின் நன்மை வேண்டி தலைமை குருக்கள் சில வாக்கியங்களைச் சொல்வார். ‘ஸர்வே ஜனா: ஸூகினோ பவந்து’ என்பது மாதிரி. உதாரணமாக மாதம் மும்மாரி பெய்ய வேண்டும், நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும், பகுதிவாழ் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதி செழிப்படைய வேண்டும் என்று பலவிதமான பிரார்த்தனைகள் மூலம் பிரதான குருக்கள் இறைவனை வேண்டுவார். 

உடன் இருப்போரும் அவ்வாறே நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு சொல்லும் ஆசீர்வாத வார்த்தையே ‘ததாஸ்து’. ஆதலால் அத்தருணத்தில் நாமும் நல்லதையே நினைக்க வேண்டும். மாற்று எண்ணங்கள் மனதில் தோன்றுமாயின் நாம் என்ன நினைத்தோமோ அதுவே நடந்துவிடும். எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள். மனம்போல மங்களமும் உண்டாகும் என்ற அடிப்படை தத்துவத்தை விளக்கும் சொல்தான் ‘ததாஸ்து’, மனம்போல வாழ்க என்றும் பொருள் சொல்லலாம். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top