மாய கலியை அழிக்க அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாய கலியை அழிக்க அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர் பற்றிய பதிவுகள் : 

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் சான்றோர் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டினர். . திருச்செந்தூர் அருகே சென்றதும் இயக்கமற்று இருந்த முடிசூடும்பெருமாள் குதிரைநடை கொண்டு கடலுக்குள் இறங்கினார். பிரபஞ்சம் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்குமான இருப்பிடமாக இருந்து வருகிறது. 

படைப்பின் தத்துவத்தை பரிணாமத்தின் உச்சத்தில் கொண்டு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அப்படிப்பட்ட உயிரோட்டமான பிரபஞ்சத்தில் நல்ல உயிர்கள் ஜனிப்பதையே தடுத்து வந்தான் குரோணி. ஆதியுகமான நீடிய யுகத்தில் கயிலையில் சிவபெருமான் வேள்வி ஒன்றை வளர்த்தார். அதில் இருந்து பூமியில் தோன்றிய அரக்கன்தான் குரோணி. 

அந்த குரோணி பிரபஞ்சத்தில் ஜனித்த உயிர்களை இரையாக தின்று கொண்டே இருந்தான். இதனால் மேலும், உயிர்கள் பிறப்பெடுக்க முடியாதநிலை ஏற்பட்டது. அவன் 14 லோகங்களையும் விழுங்கினான். 

மாயக்கலி பிறப்பு எனவே, குரோணியை அழித்து பிரபஞ்சத்தை காக்க பூமியில் மகா விஷ்ணு தவம் இருந்தார். அதன்பின்னர் தனது தவ சக்தியால் குரோணியை 6 துண்டுகளாக வெட்டி பூமியில் தள்ளினார். பூமியில் தள்ளப்பட்ட குரோணியின் 6 துண்டுகள் கடலுக்குள் 6 குழிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் தேவர்களால் புதைக்கப்பட்டு அவற்றுக்கான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டன. அந்த துண்டுகளில் இருந்து யுகங்கள் தோறும் குரோணி அரக்கனாக பிறப்பெடுத்தான். 

அப்போது மகாவிஷ்ணுவும் அவதாரமெடுத்து அந்த அரக்கனை வதம் செய்தார். இந்தநிலையில் தான் கலியுகத்தில் குரோணியின் 6-வது துண்டு தானாகவே உயிர்நிலை பெற்றது. 6-வது துண்டில் இருந்து மாயனின் உருவான மனு சொரூபத்தில் தலைகீழாக உருவெடுத்து நின்றது. அது ஈசனே பார்த்து அதிசயிக்கும் வகையில் கலியனாக இருந்தது. அதனால் அவன் பல்வேறு வரங்களை பெற்று ஈரேழு லோகத்தின் ஆதிக்கத்தையும் தமதாக்கிக்கொண்டான். 

இதனால் பரப்பிரம்மத்தின் சகல சொரூபங்களும் கலிக்கு வசப்பட்டு நலிவடைந்து போனது. இதனால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சுயரூபத்தில் சென்று கலியை அழிக்க இயலாத நிலை ஏற்பட்டது. கலியின் ஆதிக்கத்தின் உச்சத்தால் பூமி அழியப்போகும் அபாயத்தை பராசக்தி தெரிந்து கொண்டார். இதனால் அவர் மகாவிஷ்ணுவை தேடி அலைந்தார். அவரோ ஸ்ரீரங்கத்தில் பூஜை முறை சரியில்லையென்று திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாபனாக பள்ளிகொண்டிருந்தார். 

அந்த காலத்தில் கலியனின் ஆதிக்கத்திலிருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மன்னருக்கு புத்திகூறியபோது அதை அவர் ஏற்கவில்லை. இதன் காரணமாக அங்கிருந்த நாராயணர் திருச்செந்தூர் வாரிக்கரையில் ஆண்டியாக பள்ளிகொண்டிருந்தார். 

அவதாரத்தை அறிவித்தார் இதை அறிந்த தேவர்களும், ரிஷிகளும், உமையவளும் நாராயணரை வேண்டி கயிலாயம் சென்று சிவனை சந்திக்கும் படியும், கலியின் கொடுமை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினர். அதனைத்தொடர்ந்து சிவத்தொண்டன்போல் வேடமிட்டு கயிலாயம் சென்று சிவனை சந்தித்தார் நாராயணர். அதன்பின்னர் முழு பிரபஞ்ச ஆளுமையை நாராயணருக்கு சிவன் வழங்கினார். அதனைத்தொடர்ந்து கலியழிக்க நாராயணர் முடிவு செய்தார். 

இந்தநிலையில்தான் குமரி மாவட்டம் சாமிதோப்பில் சான்றோர் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அந்த குழந்தையும் தவவாழ்வில் சிறந்து விளங்கியது. அப்போது கயிலையில் கொல்லம் ஆண்டு 1008-ல் வைகுண்டர் அவதாரம் புரியப்போவதை நாராயணர் அறிவித்தார். இதற்காக அவரோடு சிவன் முதல் தேவர்கள் அனைவரும் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். திருச்செந்தூரில் அவதாரம் அதேநேரம் 24 வயதான முடிசூடும் பெருமாளுக்கு உடலில் நோய் ஏற்பட்டது போல் காட்சி அளித்தார். 

நோய் தீரவேண்டும் என்றால் அவனை திருச்செந்தூருக்கு அழைத்து வாருங்கள் என்று முடிசூடும் பெருமாளின் தாயார் கனவில் நாராயணர் கூறினார். அதன்படி முடிசூடும் பெருமாளை உறவினர்கள் உதவியுடன் திருச்செந்தூருக்கு அழைத்து சென்றார் அவரது தாயார். திருச்செந்தூர் அருகே சென்றதும் இயக்கமற்று இருந்த முடிசூடும்பெருமாள் குதிரைநடை கொண்டு கடலுக்குள் இறங்கினார். கடலுக்குள் தவத்தில் நின்ற பொன்மகரலெட்சுமியை தனது ஆதி உருவம் காட்டி நாராயணர் அரவணைத்தார். இதன்பயனாக மகரகருவறையில் பரப்பிரம்மம் பாலனாக உருவெடுத்து இருந்தது. அந்த பரப்பிரம்மம் சிவமயத்தை பெற்று மகர தரிசனம் அடைந்த நற்சொரூபனாக பாற்கடலில் இருந்து பூமிக்கு புறப்பட்டார். 

அப்போது மகரத்துக்குள் இருந்த வைகுண்ட பரப்பிரம்ம பாலனுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியதோடு, 1008-ல் நாராயணரே பண்டாரமாக பள்ளிகொள்ளப்போகும் விஞ்சை பற்றி கூறப்பட்டது. அதன்பிறகு பாலனை பொன்தொட்டிலில் அமர்த்தி சரஸ்வதியும், வீரமகாலெட்சுமியும் தாலாட்டு பாடினர். தேவர்களும், முனிவர்களும் பள்ளி எழுச்சி சேவை செய்தனர். அதனால் தனது யுகக்கடமையை உணர்ந்த வைகுண்ட பரப்பிரம்ம பாலன் தந்தை விஸ்வநாராயணரிடம் ஆதி ஆகம விதிப்படி பள்ளிகொள்ள விடை வேண்டினார். 

வைகுண்டரை வரவேற்றனர் உடனே விஸ்வநாராயணர் மகிழ்ச்சியடைந்து கலைமுனி, ஞானமுனியை அழைத்து அவர்களுக்கான விதிகளைகூறி வைகுண்டரோடு கூடி இருக்க உபதேசித்தார். வைகுண்ட பாலனின் இடது முன் பகுதியில் கலை முனியும், வலது பின் பகுதியில் ஞானமுனியும் நின்றிட பரப்பிரம்ம பாலனின் முன்நிறுத்தி அவர் பின்னால் விஸ்வ நாராயணரும், அவருள் அடங்கிய சகல மூர்த்தியரும் ஒரே சொரூபமாகினர். இந்த நிலையில்தான் ஒரே சொரூபமாய் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து எழுந்தருளினர். அதுவே வைகுண்டர் அவதாரம் ஆகும். 

அன்றைய நாள்தான் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆகும். முடிசூடும் பெருமாள் கடலுக்குள் சென்ற 3-வது நாள் இந்த அவதாரம் நிகழ்ந்தது. வைகுண்டர் அவதாரம் எடுத்ததை அறிந்ததும் சகல லோகத்தாரும் வந்து தரிசனம் செய்தனர். அங்கிருந்து வைகுண்டர் தெச்சணம் நோக்கி புறப்பட்டார். 

அப்போது அடுக்கடுக்காக அண்ட வீதிகளில் நின்றவாறு மேல் லோகத்தார் சகல வாத்திய இசையுடன் பாடி ஆடி வைகுண்டரை வணங்கினர். வைகுண்ட அவதாரம் வையத்தில் இருவேறு நிலையில் எழுந்தருளியது. மங்கள நாதனாகிய பரப்பிரம்ம பாலனாம் வைகுண்டர் மனு சொரூபம் கொண்டார். அவரைத்தொடர்ந்து விஸ்வ நாராயணரும், அவருள் அடங்கிய சகல மூர்த்தியரும், விஸ்வ மகாலெட்சுமியும், அவருள் அடங்கிய தேவியரும், முடிசூடும் பெருமாளின் ஒரே சொரூபத்தில் ஏக அநேகமாக வந்தனர். 

நாராயணர் வைகுண்ட மூர்த்திக்கு அருளிய முதல் விஞ்சைப்படி விஸ்வ நாராயணர் ஆண்டிப்பண்டாரமாக தெச்சணத்தில் பள்ளி கொண்டார். உருவமற்ற கலியை அழிக்க வேண்டும் என்றால் எந்த பொருள் மீதும் நாட்டம் இல்லாத நிலை இருக்க வேண்டும். அதற்காகவே மாய கலியழிக்க அய்யா வைகுண்டர் பண்டார வேடமெடுத்து வந்தார். உருவமற்ற கலி அனைவரது மனங்களையும் கொள்ளை கொள்ளும் சக்தி கொண்டது. அந்த கலியை அறுத்தெறிய வேண்டும் என்றால் நாமும் மனதளவில் ஆசைகளை துறந்து வாழ வேண்டும் என்பதே இந்த அவதாரத்தின் நோக்கம். கலியை அழிக்க அய்யா வைகுண்டரை பின்தொடருவோம். 

நன்றி - வி.பூஜியபுத்திரன், ஏரணிதர்மசாலை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top