அபிஷேகம், அர்ச்சனை, மந்திர ஜபம், ஹோமம், புண்ணிய நதிகளில் ஸ்நானம் போன்ற எந்த ஒரு ஆன்மிகச்செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்பாக, ‘இந்தச் செயலை குறிப்பிட்ட இந்த இடத்தில் வசிக்கும் நான், இந்தக் காலத்தில், இன்ன பலனைக் குறித்து, இந்த மகரிஷி அல்லது நூலிலா சொன்னபடி, இந்த வழிமுறையை ஒட்டி செய்யப் போகிறேன்’ என்று மனதால் தீர்மானித்துக் கொண்டு அதை வாயால் சொல்வதே சங்கல்பம் எனப்படுகிறது.
இவ்வாறு சங்கல்பம் செய்துகொள்ளும் நபரே செய்யப்போகும் பூஜை, ஜபம், அர்ச்சனை, ஹோமம் போன்ற கர்மாக்களுக்கு எஜமானர் எனப்படுகிறார்.
செய்யும் கர்மாக்களின் பலன் இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்பவருக்குத்தான் சென்றடையும்.
ஆகவே, சாஸ்திரத்தில், மகரிஷிகளின் வாக்கியத்தில் நம்பிக்கை வைத்து, முன்னோர்களின் வழக்கத்தை ஒட்டி நாம் செய்யும் பூஜை, மந்திர ஜபம், ஆலய அர்ச்சனை, அபிஷேகம், ஹோமங்கள் மற்றும் வீட்டில் செய்யும் திருமணம் கிருஹப்பிரவேசம் சீமந்தம், உபநயனம் போன்ற அனைத்து மங்கள நிகழ்ச்சிகள் என்று அனைத்து கர்மாக்களிலுமே சங்கல்பம் என்பது உண்டு.
இந்த சங்கல்பத்தையே சற்று விரிவான முறையில், அதாவது நாம் வசிக்கும் ஊர், இவ்வுலகத்தில் எங்கு அமைந்துள்ளது, என்னென்ன நதிகள், மலைகள், புண்ணிய க்ஷேத்ரங்களின் நடுவில் அமைந்துள்ளது போன்ற விபரங்களையும், அத்துடன் எதற்காக அந்த கர்மாவை செய்கிறோம் என்னும் நமது விருப்பங்களையும், எந்த பாபங்களைப் போக்கிக் கொள்ள இந்த கர்மா செய்யப்படுகிறது என்று பாபங்களின் பிரிவுகளையும் விரிவாக எடுத்துச் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படும்.
குறிப்பாக, காசி, இராமேஸ்வரம் போன்ற தலங்களில், கடல், கங்கை, காவேரி, தாமிரபரணி, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் குளிக்கும் முன்பாக, அந்த நதியின் கரையில் அமர்ந்து, இவ்வாறு மகாசங்கல்பம் செய்து கொண்டு அதன் பின்னர் குளிப்பது செய்வது பண்டைய நாள் முதல் வழக்கமாக உள்ளது.
ஆகவே, சங்கல்பம், மகாசங்கல்பம் என்னும் இரண்டுக்கும் சுருக்கம் - விரிவு என்பதைத் தவிர, மற்ற எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டுக்கும் பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் கிட்டும்.