நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அதிகம் அருள்பவர். கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். பல புண்ணிய அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி.
பௌர்ணமி ஒரு முக்கியமான நாள். காரணம், அந்நாளில் நிலவு சுண்டியிழுக்கும் தன்மை நிறைந்ததாய் இருக்கும். உங்கள் குணம் எதுவோ, அதனை அந்நாள் மேம்படுத்தும். ஆகவே ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக தியானம் செய்பவர்களுக்கு, பௌர்ணமி இரவு மிக உகந்ததாய் இருக்கும்.
ஏனென்றால் பௌர்ணமி இரவில் தியானம் செய்யும் பொழுது, இயற்கையாய் இருப்பதை விட அதிகமாகவே உங்கள் சக்திநிலை உயரும். அப்படி சக்திநிலை உயரும் போது, விழிப்புணர்வு ஆழமாகிறது. சக்திநிலை மேம்படாமல், விழிப்புணர்வைப் பற்றி நாம் பேசவே இயலாது.
பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். உங்கள் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம். கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம். தெய்வங்களுக்கு விரதம் மேற்கொள்ளலாம். பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் நலம் தரும்.
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கு பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.