சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புது வருடம் வரவேற்கப்படுகிறது.
இந்த புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நாம் அனைவரும் புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாகும்.
வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது ஐதீகம்.
செய்ய வேண்டியவைகள்
தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் கொண்ட தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.
தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை படைப்பது முறையாகும். அன்றைய நாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு.
அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.
சித்திரை மாத பிறப்பு என்பதால் கோடை காலத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். கோடை காலத்திற்கு உகந்த தானங்களை எல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் செய்வது நல்லது.
தோஷங்கள் நீங்கி வாழ்வு மலர உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம். மேலும் நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவை செய்வதால் உங்களுடைய கர்மாக்கள் அனைத்தும் தீரும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்பு.
தமிழ் புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும்.
இளநீர், நுங்கு, விளாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சி மிகுந்த பழங்களை வாங்கி தானம் செய்வதும், நீங்கள் சாப்பிடுவதும் மிகவும் நல்லது.
தமிழ் புத்தாண்டு அன்று கடைக்கு சென்று நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது மென்மேலும் அவைகள் பெருக செய்யும்.
அதுபோல கல் உப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்யும்.
செய்யக்கூடாதவைகள்
அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.
வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்றக் கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. புதிய பொருட்களை வாங்கலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை அன்றைய தினம் யாருக்கும் கொடுக்கக் கூடாது.