மங்கலம் அருளும் சோப கிருது வருடம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்கலம் அருளும் சோப கிருது வருடம் பற்றிய பதிவுகள் :

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!

எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.

கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம். இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.

ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.

தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் தொடக்கமாக சித்திரையில் தான் வேங்கை மரம் பூக்கும். தமிழ் புத்தாண்டின் சிறப்பை பற்றி சங்க இலக்கிய நூலான நெடுநெல்வாடையில் கூட மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

சித்திரை நமக்கு மட்டுமல்ல இலங்கை, மியான்மர், கம்போடியோ உள்ளிட்ட நாடுகளுக்கும் சித்திரை ஒன்றுதான் புத்தாண்டு.

தமிழ் வேந்தர் ராஜராஜ சோழன் எந்தந்த நாடுகளை ஆண்டாரோ அங்கெல்லாம் சித்திரை ஒன்றுதான் புது வருடப்பிறப்பு.

இந்த சோப கிருது வருடம் அறுபது ஆண்டு கணக்கு சுழற்சியில் வரும் 37வது ஆண்டு ஆகும். தமிழில் இந்த ஆண்டுக்கு மங்கலம் என்று பொருள்.

 மங்கலம் என்றால் நன்மையான விசயங்கள் இந்த வருடத்தில் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்த சோப கிருது வருடம் 14-4-2023 அன்று திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னத்தில் பிறந்தது. இதை சோப கிருது வருடத்தில் உள்ள வெண்பாவே நமக்கு உணர்த்துகிறது.

இடைக்காடர் சித்தர் அறுபது வருடங்களுக்கும் அதாவது ஒவ்வொரு தமிழ் வருடங்களுக்கும் ஒவ்வொரு வெண்பா எழுதி இருப்பார். அதனடிப்படையிலே அந்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இந்த சோப கிருது வருடத்தின் வெண்பா என்னவென்றால்,

"சோபகிருது தன்னிற் நொல்லுவதெல்லாம் செழிக்கும்!
கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்
உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகுமன்றே யுரை!"

பொருள் :

சோபகிருது வருடத்தில் உலகில் உள்ள பாரம்பரியமான ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும். எங்கும் செல்வம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும்.

உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மழை பொய்க்காது பெய்யும். எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் என வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். அர்க்காதிபதியாக சுக்கிரன், மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. சஸ்யாதிபதியாக சந்திரன், ராஜாதிபதியாக புதன், நீராதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசுநாயகராக பலதேவர் வருகிறார்கள்.

சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ராஜாபதியாகவும் வருவதால் நாட்டில் கல்வி, கலைகள்,தொழில்கள் செழிக்கும்.

அனைத்து வகை பயிர்களும் செழிப்பாக வளர்ந்து நல் விளைச்சலை கொடுக்கும். அருமையாக மழை பொழிந்து நாடு செழிக்கும். அனைத்து துறையினரும் மேன்மை அடைவார்கள். ஆன்மிகமும், ஜோதிடமும் செழிக்கும். தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மேன்மை பெறும்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான மழை உண்டு குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையை பெறும். தானிய உற்பத்தி, உப்பு உற்பத்தி அதிகரிக்கும்.

மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் உண்டாகும்.

விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். பட்டுசேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.

சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் அனைத்து நாடுகளிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் சமாதானம் உருவாகும். எல்லை பிரச்சினைகள் தீரும். உலகில் சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானமும், அமைதியும் உண்டாகும்.

தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் நன்றாக விளையும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். அதேபோல் பருத்தியும் அமோக விளைச்சலை கொடுக்கும்.

இந்த சோபகிருது வருடத்தில் மொத்தம் 4 கிரகணங்கள் நடக்க உள்ளது. அதில் 3 சூரிய கிரகணம், ஒரு சந்திர கிரகணம் வர உள்ளது.
இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.

பண்டிகைகள் என்பது நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது! பண்டிகைகள் கொண்டாடுவதின் நோக்கமே பழைய துன்பங்களை மறந்து புதிதாக வாழ்வை தொடங்க வேண்டும் என்பதற்காகதான்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top