வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில் பற்றிய பதிவுகள் :

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கீழ்வேளூர். இதனை பேச்சுவழக்கில் கீவளூர் என்று அழைக்கிறார்கள். இங்கு வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில் உள்ளது. 

இத்தல இறைவனை அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். இத்தலத்தில்தான் அகத்தியருக்கு, நடராஜப்பெருமான் தமது வலதுபாத தரிசனம் தந்தருளினார். குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து, அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்து அருளினார், முருகப்பெருமான். சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை கொலை பாவம் சூழ்ந்தது. இதனால் முருகப்பெருமானின் மனம், ஒரு நிலையில் இல்லாமல் இருந்துவந்தது. இதனை விலக்க முருகப்பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார். ஆனால் எந்த இடத்திலும் அவரது சிவபூஜை நிறைவுபெறாதபடி, முருகப்பெருமானின் மனதை அந்த பாவமானது வாட்டி வதைத்து வந்தது. அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம், கெட்ட சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடாமல் தடுத்தன. முருகப்பெருமானைச் சுற்றிப் பல பயங்கர முகங்கள் தாண்டவ மாடின. எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள்.

இதையடுத்து முருகப்பெருமான், சிவபெருமானிடம் “ஐயனே.. சிவபூஜையை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றி, “முருகா.. சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு சென்று சிவ பூஜை செய். உன் தாயின் அருளால் உன்னை சூழ்ந்த கெட்ட சக்திகள் விலகும்” என்று அருளினார்.

சிவபெருமான் சொன்னபடியே இலந்தை வனம் வந்து, அங்கு சுயம்புவாக இருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற, அதிலிருந்து தீர்த்த நீர் வெளிப்பட்டது. அந்த தீர்த்தமே இத்தல சரவண பொய்கையாக திகழ்கிறது. இப்போதும் முருகப்பெருமானைச் சுற்றி, கெட்ட சக்திகள் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தன. இதனைக் கண்ட பார்வதிதேவி, தன்னில் இருந்து காளியை தோற்றுவித்தாள். காளி தேவி, முருகப்பெருமான் பூஜை செய்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் கவசம் உண்டாக்கி, கெட்ட சக்திகளை தடுத்து நிறுத்தினாள். இதையடுத்து முருகப்பெருமானின் சிவ பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.

இதையடுத்து முருகப்பெருமான், தம்மை சுற்றி நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை ‘அஞ்சுவட்டத்தம்மா’ எனப்போற்றித் துதித்தார். முருகப்பெருமானை காத்த காளி அன்னை இத்தலத்தில் ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்னும் திருநாமத்திலேயே அருள்பாலிக்கிறாள். அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதை வடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி இருக்கிறாள். இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி, கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து, 9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து, குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வந்தால், நம்மை பிடித்த தீராத நோய்கள், வறுமை, பில்லி சூனியம் போன்ற தீவினைகள் அனைத்தும் விலகிவிடும்.

இந்த ஆலயத்தின் மூலவர் கேடிலியப்பர், சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு புனுகுசட்டம், சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள், கெடுதல்கள், கிரக தோஷங்கள், கர்மவினைகள் போன்றவற்றை அகற்றி இன்பம் அருள்வதால் ‘கேடிலியப்பர்’ என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில், இத்தல அம்மையப்பனை வழிபட்டால் துன்பங்களும், வினைகளும், பிணிகளும் அகன்றோடும் என்கிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top