அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோவில்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோவில் பற்றிய பதிவுகள் :

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோவில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் அமைந்துள்ளது. 

ஆத்தூர் நகரத்தில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 

200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், வெள்ளம் பிள்ளையார் என்று பெயரும் சூட்டினர். காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார். 

பிள்ளையார் அமர்ந்த இடம் மிகவும் செழிப்படைந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய வீதிகள் அனைத்தும் பிள்ளையாரைச் சுற்றி அமைந்தன. போக்குவரத்து அதிகரித்தது. இவ்விடத்தை தாண்டிச் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகரை வணங்கிச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு காரியம் கைகூடவே, இவர் வாகனப் பிள்ளையார் என்ற பெயர் பெற்றார்.

தல பெருமை :

இக்கோவிலில் முக்கிய பூஜையே வாகனங்களுக்கு தான். புதிய வாகனம் வாங்குவர்கள் ஆர்.டி.ஓ., ஆபீசில் பதிவை முடித்து விட்டு இந்த பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுவார்கள். இங்கு வாகனத்திற்கு விநாயகர் முன்னிலையில் பூஜை முடிந்த பிறகே பயன்படுத்துகிறார்கள். 

ஆயுதபுஜை காலத்தில், ஏராளமான வாகனங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்படும். இதுதவிர அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது. இங்கு மற்றொரு சிறப்பம்சம் பெண், மாப்பிள்ளை அழைப்பு வைபவமாகும். வீட்டிலிருந்து பெண், மாப்பிள்ளை அழைப்பதை விட, இந்த கோவிலில் இருந்து அழைத்துச் செல்வதால், மணமக்கள் தீர்க்காயுளுடன் வாழ்வர் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், கோவிலிலேயே திருமணமும் நடத்தி வைக்கப்படுகிறது.

தல சிறப்பு :

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. பிள்ளையார் முன்பு ஒற்றை மூஞ்சூறு வாகனம் இருக்கும். மகாராஷ்டிராவில் இரட்டை மூஞ்சூறு வாகனங்களைப் பார்க்கலாம். ஆனால் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரிய மூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ள வித்தியாசமான கோவில் இது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top