செல்வம் பெருகும் அட்சய திருதியை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து செல்வம் பெருகும் அட்சய திருதியை பற்றிய பதிவுகள் :

அட்சய திருதியை அன்று செல்வம் பெருகவும், தங்கம் சேரவும் பலரும் தங்கம் வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். தங்கம் விற்கும் விலையில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். 

இந்த அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. 

அமாவாசைக்கு 3வது நாள் திருதியை திதி. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் 3வது நாள் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. 

இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ஏப்ரல் 22ஆம் குரு பெயர்ச்சியும் அட்சய திருதியை நாளில் வருகிறது.

அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு அட்சதை என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு அட்சய திருதியை எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார். மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். 

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார். 

அரிதான வேலையை சந்திப்பதை அலப்ய யோகம்' என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

மஹாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். 

ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மஹாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது நல்ல பலன்களை தரும். அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்வதும் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து மஹாலட்சுமியை வணங்குவதும் சிறப்பு. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும். அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் மல்லிகைப் பூ வாங்கிப்போட்டு, கனகதாரா ஸ்தோத்திரம் படித்து மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், அன்னை மஹாலட்சுமி நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள். 

மஹாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மஹாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். 

அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளிதான் வாங்க வேண்டும் என்று இல்லை, கல் உப்பு, மஞ்சள், பச்சரிசி, நெய் போன்ற பொருட்களும் வாங்கலாம் பல மடங்காக பெருகும். நம்முடைய வீட்டில் அள்ள அள்ள குறையாக உணவுப்பொருட்களும் சேரும். 

இந்த நாளில் நாம் கொடுக்கும் தானமும் நம்முடைய புண்ணிய கணக்கில் பல மடங்காக சேரும். யாருக்கும் மனதால் கூட தீங்கு நினைக்காதவர்களுக்கு அன்னை மஹாலட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும். செல்வ வளமும் பெருகும். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெருகி நிம்மதியான வாழ்க்கை அமையும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top