தமிழ் கடவுள் முருகன் அவதரித்த தினமாக வைகாசி விசாகம் திருவிழா உலகெங்கிலும் வாழும் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில் பால்குடம் எடுத்தும் காவடிகள் சுமந்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது.
அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.
தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான்.
பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதத்து பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள்.
வைகாசி விசாக நாளில் வீட்டில் கந்த வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இந்த நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிடவேண்டும். விளக்குகளுக்கு சந்தனம் குங்குமமிட்டு, விளக்கேற்றவேண்டும்.
முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்!
எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது வேலை வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். இன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும்.
லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.
வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள்.
ஞானகுரு முருகப் பெருமானை, வேலவனுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திர நாளில், வணங்கி வளம் பெறுவோம். கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார் வேலவன்.