இந்த உலகினை ஒளிப்பெறச் செய்யும் கடவுளாக கருதப்படுபவர் சூரிய பகவான் ஆவார். நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படும் கிரகம் சூரிய பகவானே. காரணம் அனைத்து கிரகங்களையும் ஆளுமை செய்யும் தன்மை இந்த சூரியனுக்கே உண்டு.
மேலும், மற்ற கிரகங்களை வக்கரகம் செய்யும் சக்தியும் அஸ்தமனம் பெற செய்யும் சக்தியும், சூரிய பகவானுக்கு உள்ள சிறப்பு அம்சங்களாகும். அப்படிபட்ட சூரிய பகவான், ஒருவருடைய ஜாதக அமைப்பில் எந்த நிலையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல், ஜாதகருக்கு அதிக நன்மையான பலன்களை வாரிவழங்க கூடியவராகவும் உள்ளார்.
சூரிய பகவானின் பலன்கள் :
சூரியனின் இருப்பிடம் சிம்மமாகும். உச்ச இடம் மேஷம். நீச இடம் துலாம். விருச்சிகம், தனுசு, மீனம், கடகம் சம வீடுகளாகவும், ரிஷபம், மகரம், கும்பம் பகை வீடுகளாகவும் கருதப்படுகிறது. பொதுவாக சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும்.
சூரிய பகவான் ஒரு ராசி கட்டத்தில் ஒரு மாதம் விகிதம் 12 ராசிகளில் ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்வார்.
சூரியனின் சஞ்சாரம் சித்திரை மாதம் மேஷத்தில் தொடங்கி பங்குனி மாதம் மீனத்தில் முடிவடையும்.
சூரியன் பரணி நட்சத்திரம் 3ம் பாதம் முதல் ரோகிணி நட்சத்திரம் 2ம் பாதம் முடிய சஞ்சரிக்கும் காலத்தை கத்தரி காலம் என்கிறோம். இக்காலங்களில் சூரியனின் உஷ்ணம் பூமியில் அதிகமாக இருக்கும். இக்காலங்களில் புது வீடு கட்டுதல், புது வீடு புகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
சூரியனால் உண்டாகக்கூடிய யோகங்கள் :
1. சுபவேசியோகம் :
சூரியனுக்கு 2ம் வீட்டில் சுபகிரகம் இருப்பது. இதனால் பெயர், புகழ், பெருமை யாவும் உயரும்.
2. பாபவேசியோகம் :
சூரியனுக்கு 2ம் வீட்டில் அசுப கிரகங்கள் அமையப் பெற்றிருப்பது, அதிர்ஷ்டமற்ற வாழ்க்கை அமைந்து வாழ்க்கையே போராட்டகரமாக இருக்கும்.
3. சுபவாசியோகம் :
சூரியனுக்கு 12ம் வீட்டில் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வாக்கு உயரும். எழுத்தாற்றல், பேச்சாற்றல் உயரும்.
4. உபயசரி யோகம் :
சூரியனுக்கு இருபுறமும் சுபகிரகம் இருப்பது. இதனால் செல்வாக்கு, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு அமையும்.
அருள்மிகு சூரியனார் திருக்கோவில் :
இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மாயவரம் இருப்பு பாதையில் ஆடுதுறை இரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனார் திருக்கோயில் உள்ளது.
வரலாறு படி இது கி.பி. 1070 ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சூரியனார் கோவில் மேற்கு நோக்கி இருக்கிறது.
கருவறையில் சூரிய பகவானின் திருவுருவமும், அவருக்கு இரண்டு பக்கங்களிலும் உஷ, பரத்யஷ என்னும் இரு தேவியர் உள்ளனர். இக்கோவில் சூரிய பகவானை கண் குளிர தரிசித்து நம் வினைகள் எல்லாவற்றையும் போக்கிக் கொள்ளலாம்.