இறைவனுக்கு பூஜிக்கும் பொருள்களில் ஒன்று பூக்கள். பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத விடியற்காலத்தில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமானது. இந்த பூக்கள் எந்த நேரத்தில் இறைவனுக்கு பூஜித்தால் நன்மை என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, செண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும். தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது.
நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மரிக்கொழுந்து, வெட்டிவேர், துளசி, வில்வம் ஆகியன உகந்தன.
தெய்வ புஷ்பங்கள் :
பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மஹாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மஹாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான்.
தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ.
இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அரளி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும்.
முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், குறிஞ்சிப்பூ, செவ்வரளி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை.